/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துாய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்; ரூ.4,700 வீதம் போனஸ் வழங்க பேச்சில் அறிவிப்பு
/
துாய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்; ரூ.4,700 வீதம் போனஸ் வழங்க பேச்சில் அறிவிப்பு
துாய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்; ரூ.4,700 வீதம் போனஸ் வழங்க பேச்சில் அறிவிப்பு
துாய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்; ரூ.4,700 வீதம் போனஸ் வழங்க பேச்சில் அறிவிப்பு
ADDED : அக் 22, 2024 08:12 AM

கோவை : சட்டப்படி போனஸ் வழங்காததை கண்டித்து, கோவை மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் நேற்று ஒரு நாள் குப்பை அள்ளாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி கமிஷனர் பேச்சு நடத்தி, ஒவ்வொரு தொழிலாளிக்கும், ரூ.4,700 போனஸ் வழங்க நடவடிக்கை எடுத்தார்.
கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சட்டப்படி, 8.33 சதவீத போனஸ் வழங்க வேண்டுமென, தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பான பேச்சு, கடந்த சனிக்கிழமை நடந்தது.
ஒப்பந்த நிறுவனம் தரப்பில் ரூ.4,000 தருவதாக கூறியதை, தொழிற்சங்கத்தினர் ஏற்கவில்லை. அதனால், 21ம் தேதி (நேற்று) பேச்சு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, சில தொழிலாளர்களுக்கு ரூ.1,800, சிலருக்கு ரூ.3,500 வீதம் வங்கி கணக்கில் வரவானது. இது, தொழிற்சங்கத்தினரை அதிர்ச்சி அடைய வைத்தது.
கண்டன ஆர்ப்பாட்டம்
ஒப்பந்த நிறுவனத்தினரின் தன்னிச்சையான போக்கை கண்டித்து, கோவை செஞ்சிலுவை சங்க கட்டடம் அருகே, கோவை மாநகராட்சி அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தப்பட்டது; துாய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து, போராட்டத்தில் பங்கேற்றனர். பின், கலெக்டர் கிராந்திகுமாரை, தொழிற்சங்க நிர்வாகிகள் சந்தித்து முறையிட்டனர்.இதையடுத்து, மாநகராட்சி அலுவலகத்தில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் பேச்சு நடந்தது. சட்டப்படி, 8.33 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்பதை, தொழிற்சங்கத்தினர் மீண்டும் வலியுறுத்தினர்.
அதற்கு, 'ஒப்பந்த நிறுவனத்தினர் ஒப்பந்த காலம் முடியப் போகிறது. புதிய ஒப்பந்தம் கோரும்போது, சட்டப்படியான, 8.33 சதவீதம் போனஸ் வழங்குதல்; இ.எஸ்.ஐ., - பி.எப்., பணம் செலுத்துதல் உள்ளிட்ட அனைத்து விதமான சட்ட ஷரத்துகள் சேர்க்கப்படும்' என, உறுதியளிக்கப்பட்டது.
இவ்வாண்டு ரூ.4,700 போனஸ் வழங்க ஒப்பந்த நிறுவனம் தரப்பில் கூறப்பட்டது. வங்கி கணக்கில் வரவு வைத்த தொகைக்கும், போனஸ் தொகைக்கும் உள்ள வித்தியாசத் தொகை, உடனடியாக கணக்கிட்டு கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'புதிய ஒப்பந்தம் கோரும்போது, சட்டப்படி போனஸ் வழங்குவதற்கான ஷரத்து சேர்க்கப்படும் என, கமிஷனர் உறுதியளித்துள்ளார். தற்போது, 4,700 ரூபாய் வழங்குவதாக கூறியுள்ளனர். இதர கோரிக்கைகளை வலியுறுத்தி, தீபாவளி பண்டிகை முடிந்தபின், போராட்டம் நடத்தப்படும்' என்றனர்.