/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சந்தான வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
/
சந்தான வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
ADDED : நவ 20, 2024 10:36 PM

மேட்டுப்பாளையம்; காரமடையில் சந்தான வேணுகோபால சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
காரமடையில் மிகவும் பிரசித்தி பெற்ற, அரங்கநாதர் கோவிலின் உப கோவில், சந்தான வேணுகோபால சுவாமி கோவில் ஆகும். இது ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டதாகும்.
கடந்த, 2003ம் ஆண்டு இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 21 ஆண்டுகளுக்குப் பின், கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன. கோபுரத்திற்கு வர்ணங்கள் பூசப்பட்டன.
திருப்பணிகள் முடிந்த பின், 19ம் தேதி வாசுதேவ புண்யாகம், தன பூஜை, வாஸ்து பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று காலை திருப்பள்ளி எழுச்சி, திருப்பல்லாண்டு, திவ்ய பிரபந்த சேவை, வேத பாராயணம் சேவை, இரண்டாம் கால யாக வேள்வி பூஜைகள், மூல மந்திரம், காயத்ரி ஹோமங்கள், நாடி சந்தானம் ஆகியவை நடைபெற்றன. அதைத் தொடர்ந்து காலை, 10:00 மணிக்கு யாக சாலையிலிருந்து தீர்த்த குடங்கள், கோவிலின் உள்ளே வலம் வந்து, கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அர்ச்சகர் திருவேங்கடம் கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார்.
அதைத் தொடர்ந்து சுவாமிகள் மீது புனித தீர்த்தம் தெளித்து, அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த விழாவில் எம்.எல்.ஏ., செல்வராஜ், கோவில் அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த், காரமடை நகராட்சி தலைவர் உஷா வெங்கடேஷ், நந்தகுமார், மாவட்ட கவுன்சிலர் சங்கீதா உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில், போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சந்திரமதி மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.