தென்னை நார் கயிறு தொழிலை காப்பாத்துங்க! மூலப்பொருள் மானியம் எதிர்பார்ப்பு
தென்னை நார் கயிறு தொழிலை காப்பாத்துங்க! மூலப்பொருள் மானியம் எதிர்பார்ப்பு
UPDATED : செப் 16, 2026 04:59 PM
ADDED : செப் 16, 2026 04:41 PM

பொள்ளாச்சி: கயிறு தொழில் மேம்படுத்த கொள்முதல் நிலையம் அமைத்தல் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கயிறு உற்பத்தியாளர் நலச்சங்கத்தினர் அரசுக்கு வலியுறுத்தி உள்ளனர். பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. தென்னை நார் மற்றும் கயிறு உற்பத்தி உள்ளிட்ட தொழில்கள் நடைபெறுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் கயிறுகள், கேரளாவுக்கு அனுப்பப்பட்டு, அங்கு இருந்து, 'மேட்' தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக, கயிறுக்கு கட்டுபடியான விலை கிடைக்காததால் தொழில் பாதித்தது. இத்தொழிலை மேம்படுத்த தேவையான வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என, கயிறு உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கயிறு உற்பத்தியாளர் நலச்சங்க செயலாளர் மகேந்திரன், பொருளாளர் கொற்றைவேல் ஆகியோர் கூறியதாவது:
தமிழகத்தில், 2,000க்கும் மேற்பட்ட நார் தொழிற்சாலைகள் உள்ளன. தற்போது கயிறு உற்பத்தி தொழிலை பொறுத்தவரை, உற்பத்திக்கு தேவையான அனைத்து வகையான மூலப்பொருட்களின் விலை, 50 சதவீதம் உயர்ந்துள்ளது.
மின்கட்டணம், இயந்திர உதிரிபாகங்கள் விலை உயர்வால் உற்பத்தி செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால், விற்பனை விலை குறைவாக உள்ளதால் நஷ்டம் ஏற்படுகிறது. அதனால், நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர் மின்வெட்டால், கயிறு உற்பத்தி தொழில் பாதிக்கிறது. இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண, தொழில்துறையின் தேவைகளை அரசிடம் முறையாக எடுத்துச் செல்ல கயிறு தொழிலுக்கென தனியான வாரியம் அமைக்க வேண்டும்.
முக்கியத்துவம் வாய்ந்த தொழிலுக்கு உரிய அங்கீகாரம், அரசின் ஆதரவும் கிடைப்பதில்லை. எனவே, கயிறு உற்பத்தி தொழிலுக்கு உரிய அரசு அங்கீகாரம் மற்றும் ஆதரவு வழங்க வேண்டும்.
கேரளா மாநிலத்தில், கூட்டுறவு சொசைட்டி உள்ளதால் கயிறு உற்பத்தி செய்வோர் நேரடியாக விற்று பயன்பெறுகின்றனர். அதுபோன்று, பொள்ளாச்சியில், கயிறு கொள்முதல் மையத்தால் முழு பலன் பெற முடியும். கேரளாவில் வழங்குவது போன்று, தமிழகத்திலும் மூலப்பொருட்களுக்கு உரிய மானியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
