கட்டுமான மூலப்பொருட்கள் தட்டுப்பாடு: கலப்படத்தால் தரமும் கேள்விக்குறி
கட்டுமான மூலப்பொருட்கள் தட்டுப்பாடு: கலப்படத்தால் தரமும் கேள்விக்குறி
UPDATED : ஆக 07, 2026 09:44 PM
ADDED : ஆக 07, 2026 09:11 PM

கோவை: எம்.சாண்ட், பி.சாண்ட் விலை உயர்வு பொருளாதார சுமையை கூட்டுவதுடன், பொருட்களில் கலப்படம் என்பது கட்டுமான துறையினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னைக்கு அடுத்து கல்வி, தொழில், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் கோவை வளர்ந்த நகராக உள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்தும் இங்கு குடிபெயர்வது அதிகரித்துள்ளது.
நகரங்களில் இடநெருக்கடி காரணமாக புறநகரங்களில் குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. அதிக கட்டடங்கள் எழுப்பப்படும் இச்சூழலில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு என்பது பணிகளில் தேக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
முக்கிய மூலப்பொருளான எம்.சாண்ட் விலை மூன்று யூனிட்டிற்கு ரூ.21,000 ஆகவும், எம்.சாண்ட் ரூ.21,500, முக்கால் இன்ச் ஜல்லி ரூ.16,000, அரை இன்ச் மெட்டல் ரூ.16,000 ஆக அதிகரித்துள்ளது.
இதே எம்.சாண்ட் கடந்த மாத இறுதியில்(மூன்று யூனிட்) ரூ.16,500 ஆகவும், எம்.சாண்ட் ரூ.18,000, மெட்டல் மற்றும் ஜல்லி தலா ரூ.13,500 ஆகவும் இருந்தது.
முடங்கிய வேலைகள்!
''கடந்த மாதம் ரூ.7,500 ஆக இருந்த கிராவல் மண்(3 யூனிட்) தற்போது ரூ.8,800-9,000 ஆக அதிகரித்துள்ளது. 50 கிலோ சிமென்ட் மூட்டை விலை ரூ.20 அதிகரித்து ரூ.350 வரை விற்பனையாகிறது. விலை ஏற்றத்தால் கட்டட பணி மந்தமாக உள்ளது.
சில இடங்களில் வேலைகள் நின்றுவிட்டன. கிராவல் மண் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. அதிக கட்டுப்பாடுகள் காரணமாக இம்மண் எடுத்து விற்க தயங்குகின்றனர். வெள்ளை கற்களை அரைத்து கிராவல் மண் என்கின்றனர். 'காஸ்டிங்' கழிவு மண் இத்துடன் கலந்து விற்கப்படுகிறது.
விலை ஏற்றத்தால் மொத்த சதுரடி கணக்கில் கட்டடம் எப்படி கட்ட முடியும். ஓரு கட்டடம் கட்ட 8 மாதங்கள் என்று வைத்தாலும் பொருட்கள் விலை நிலவரம் அப்படியே இருப்பதில்லை.
இதனால் மொத்த சதுரடி கணக்கில் வேலை செய்பவர்கள், கட்டட உரிமையாளர்கள் இடையே மன சங்கடம் ஏற்படுகிறது. ஆட்கள் கூலியும் அதிகரித்துவிட்டது. இதனால் வங்கிக்கடன் வாங்கி கட்டடம் கட்டுவோர் பாதிக்கப்படுகின்றனர்,'' என்கின்றனர் கட்டுமான துறையினர்.
ஏமாற்றம்!
பணப்புழக்கம் அதிகம் உள்ளது கட்டுமான துறையில்தான். ஆனால், தமிழக பட்ஜெட்டில் இத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்காதது ஏமாற்றம் தருகிறது. விலை உயர்வையும், கலப்படத்தையும் கட்டுப்படுத்த தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.
