/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பிள்ளைகளை வெளியே அனுப்ப பயமாக இருக்கிறது'
/
'பிள்ளைகளை வெளியே அனுப்ப பயமாக இருக்கிறது'
ADDED : மார் 07, 2024 03:42 AM

கோவை : புதுச்சேரியில் 9 வயது பெண் குழந்தை, பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்து வீசப்பட்ட சம்பவம், அனைவரையும் பதைபதைப்புக்கு ஆளாக்கியுள்ளது. இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் காட்டுமிராண்டிகளை தண்டிக்க, 'போக்சோ' சட்டம் மட்டும் போதுமா? கொதிக்கிறார்கள் கோவை பெண்கள்.
ஸ்வேதா, கட்டடவியலாளர் : குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உடனடியான தண்டனை என்பது அவசியம். நம் நாட்டில் இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும். எங்கள் பிள்ளைகளை வெளியில் அனுப்பவே அச்சமாக உள்ளது. இது, சமூகத்தின் அவலத்தை பிரதிபலிக்கிறது.
ஹம்சபிரியா, பேராசிரியர்: புதுச்சேரி சம்பவம், நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற சம்பவங்களை வன்மையாக கண்டிக்கிறேன். தண்டனைகளை கடுமையாக்க வேண்டும். பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களின் முகத்தை மூடி செல்ல அனுமதிக்கக் கூடாது. குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதை முதலில் நிறுத்த வேண்டும். பணம், அரசியல் பின்புலம், மதம் என்ற எதை காரணமாக வைத்தும், குற்றவாளிகள் தப்பிக்காதபடி சட்டங்கள் இருக்க வேண்டும். வெளிநாடுகளில் நடுரோட்டில் வைத்து சுடுவார் என்று கேட்பதுண்டு; இங்கும் அதுபோன்று நடந்தால், இதுபோன்ற ஜென்மங்கள் திருந்த வாய்ப்பு உண்டு.
கவிதா செந்தில், தொழில்முனைவோர்: குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கொடுமையானது. இதற்கு மன்னிப்பு, கருணை என்பது இருக்கக்கூடாது. தற்போதுள்ள சட்டங்களால் எவ்வித பலனும் இல்லை; சட்டத்தை கடுமையாக்க மாற்றி, தண்டனை உடனடியாக கிடைக்கும்படி செய்ய வேண்டும். பெண்களின் ஆடை, இரவு நேரங்களில் வெளியில் செல்வது போன்ற, காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. புதுச்சேரி சம்பவம் மிகவும் வருத்தத்திற்கு உரியது. சாக்கடையில் தன் பிள்ளையின் உடலை எடுப்பது அந்த குடும்பத்திற்கு எத்தனை வலியை கொடுக்கும். கடுமையான தண்டனைகள் ஒன்றே தீர்வு.
சுபாஷினி, தொழில்முனைவோர் : பேசி பேசி என்ன நடக்கப் போகிறது; கோபம்தான் வருகிறது. குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் இப்பிரச்னைக்கு நீதி கிடைக்க போவதில்லை. இதுபோன்ற பிரச்னைகள் நடப்பதும், பத்து நாள் நாம் பேசி விட்டு பின் மறப்பதும் வழக்கமாகி விட்டது. புதுச்சேரி சம்பவம் மனதை பதற வைக்கிறது; பார்த்தபோது அழுகையே வந்து விட்டது. எந்த நம்பிக்கையில், எங்கள் பிள்ளைகளை வெளியில் அனுப்புவது? இதற்கு முற்றுப்புள்ளி யார் வைப்பது. தண்டனை கடுமையாக இருந்தால் மட்டும் தான் தப்பு நடக்காது. இதையே எத்தனை முறை சொல்வது என தெரியவில்லை.
சிவானி, கல்லுாரி மாணவி : எப்படி இதுபோன்று செய்ய மனம் வருகிறது என தெரியவில்லை. கடுமையான தண்டனைகள் வேண்டும். வேறு வழிகள் ஏதும் இல்லை.

