/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பராமரிப்பு இல்லாத பள்ளி கட்டடங்கள்
/
பராமரிப்பு இல்லாத பள்ளி கட்டடங்கள்
ADDED : அக் 15, 2024 10:25 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் கட்டடங்கள் போதிய பராமரிப்பின்றி உள்ளதால், மழையின்போது மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை என, 326 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
பல பள்ளிகளில், கட்டடங்கள் முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. மழையின்போது, கட்டடங்களின் மேற்கூரையில் தண்ணீர் ஒழுகுவதால், வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
பலவீனமான கட்டடங்களில் மாணவர்கள் அச்சத்துடன் அமர்ந்து படிக்கின்றனர். மேலும், முன்னெச்சரிக்கையாக, வகுப்பறைக்கான மின் இணைப்பை, தற்காலிகமாக துண்டித்து விடுகின்றனர்.
இது குறித்து தலைமையாசிரியர்கள் கூறியதாவது: தற்போது மழை இடைவிடாமல் பெய்யும் சூழலில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, பாதுகாப்பான வகுப்பறையில் அவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது.
சில பள்ளிகளில் கட்டடத்தின் மேற்கூரையில் தண்ணீர் தேங்கி, மழைநீர் கசிகிறது. பொதுப்பணித்துறையால், புதிய கட்டடம் கட்டப்பட்டாலும், அதன் உறுதி தன்மை நீண்ட காலம் நீடிப்பதில்லை. முறையாக ஆய்வு நடத்தி, பள்ளிக் கட்டடங்களை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.