ADDED : டிச 06, 2025 05:04 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, மண்ணுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், உணவுத்திருவிழா நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவுசல்யா தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஜோதிலட்சுமி முன்னிலை வகித்தார்.
பொள்ளாச்சி வடக்கு வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் சுகந்தி லட்சுமி, ஆசிரியர் சத்தியா ஆகியோர் பங்கேற்றனர். கோடங்கிப்பட்டி பள்ளி தலைமையாசிரியர் தினகரன், மாறி வரும் துரித உணவு பழக்க வழக்கத்தில் இருந்து, பாரம்பரியமான நமது இயற்கை சார்ந்த உணவுகளை வீட்டில் தயாரித்து உட்கொள்வதன் அவசியம் குறித்து விளக்கினார்.
முளை கட்டிய பயிர்கள், ஊட்டச்சத்துக்கள், உணவு கோபுரம், சரிவிகித உணவு ஆகியவற்றின் வாயிலாக இளமை பருவத்திலேயே மாணவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை பேண முடியும் என விளக்கினார்.
தொடர்ந்து, மாணவர்கள் தங்களது வீட்டில் தயாரித்த உணவுப்பொருட்களை காட்சிப்படுத்தினர். உணவு பதார்த்தங்களின் பெயர்கள், தயாரிக்க தேவையான பொருட்கள், தயார் செய்யும் முறை குறித்து மாணவர்கள் விளக்கினர்.
மண்ணுார் பள்ளி ஆசிரியர் ஆஷா, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர், மாணவர்கள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

