/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூலுார் தீயணைப்பு நிலையத்துக்கு சொந்த இடம் தேடியும் கிடைக்கல:ஐந்து ஆண்டுகளாக தொடரும் போராட்டம்
/
சூலுார் தீயணைப்பு நிலையத்துக்கு சொந்த இடம் தேடியும் கிடைக்கல:ஐந்து ஆண்டுகளாக தொடரும் போராட்டம்
சூலுார் தீயணைப்பு நிலையத்துக்கு சொந்த இடம் தேடியும் கிடைக்கல:ஐந்து ஆண்டுகளாக தொடரும் போராட்டம்
சூலுார் தீயணைப்பு நிலையத்துக்கு சொந்த இடம் தேடியும் கிடைக்கல:ஐந்து ஆண்டுகளாக தொடரும் போராட்டம்
ADDED : மார் 07, 2024 11:38 AM

சூலுார்:சூலுாரில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் துவங்கி ஐந்து ஆண்டுகள் ஆகியும் சொந்த இடம் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி உள்ளது.
சூலுார் தாலுகா கடந்த, 2009ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்டது. தொடர்ந்து, சந்தைப்பேட்டை வளாகத்தில் புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட்டது. அதன் பின், எம்.எல்.ஏ., அலுவலகம், அரசு போக்குவரத்து கழக டிப்போ, கோர்ட், கருவூலம், வட்டார போக்குவரத்து அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், டி.எஸ்.பி., ஆபீஸ், என, பல அரசு துறை அலுவலகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக துவக்கப்பட்டன. கடந்த, 2018 ஜுன் மாதம் தீயணைப்பு நிலையம் வாடகை கட்டடத்தில் துவக்கப்பட்டது.
முக்கிய பணி
தொழிற்துறையினர், அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் தொடர் கோரிக்கை காரணமாக தாலுகா உருவாகி, ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகுதான் தீயணைப்பு நிலையம் துவக்கப்பட்டது.
விசைத்தறி குடோன்கள், சிறிய, பெரிய நூல் மில்கள், தென்னை நார் தொழிற்சாலைகள், உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் என ஏராளமான நிறுவனங்கள் செயல்படுவதால், தீயணைப்பு நிலையத்தின் பணி முக்கியமானதாக இருந்து வருகிறது.
சூலுாரில் தீயணைப்பு நிலையம் துவக்கப்படும் முன், தீ விபத்துகள் ஏற்பட்டால், பல்லடம், பீளமேடு, அன்னூர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவேண்டி இருந்தது. அதிக தூரம் காரணமாக தீயணைப்பு வாகனங்கள் வரும் முன், பொருட்சேதம் அதிகமாக இருந்தது.
தற்போது, சூலுாரில் தீயணைப்பு நிலையம் உள்ளதால், உடனுக்குடன் சம்பவ இடத்துக்கு வீரர்கள் சென்று மீட்பு பணிகளில் ஈடுபடுவதால், பொருட்சேதம் வெகுவாக குறைந்துள்ளது.
ஆண்டுக்கு, சராசரியாக, 100 அழைப்புகளை எதிர்கொள்ளும் தீயணைப்பு துறையினர், கடந்த, ஐந்து ஆண்டுகளில், 500க்கும் மேற்பட்ட மீட்பு பணிகளில் ஈடுபட்டு, உயிரையும், பொருட்களையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
வாடகை கட்டடம்
சூலுார், சுல்தான்பேட்டை என, இரு ஒன்றியங்களில், 40க்கும் மேற்பட்ட பெரிய கிராமங்கள், 50க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. சூலுாரில் இருந்து இக்கிராமங்களுக்கு செல்ல, குறைந்தது அரைமணி நேரம் முதல், ஒரு மணி நேரம் வரை ஆகும் நிலை உள்ளது. அதனால், சூலுாரில் தீயணைப்பு நிலையம் இருந்தால் மட்டுமே மீட்பு பணிகளுக்கு விரைந்து செல்ல முடியும்.
ஐந்து ஆண்டுகளாக சொந்த கட்டடம் இல்லாமல் வாடகை கட்டடத்தில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. போதிய இடவசதி இல்லாததால், வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளவும், ஓய்வு எடுக்கவும் சிரமப்பட்டு வருகின்றனர். வருவாய்த்துறையிடம் கோரிக்கை விடுத்தும் தகுதியான இடம் கிடைக்காமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஒரு அரசு துறைக்கு தேவையான அரசுக்கு சொந்தமான நிலத்தை வருவாய்த்துறையினர் தான் அடையாளம் கண்டு கொடுக்க வேண்டும். ஆனால், அவர்கள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். அனைத்து அரசு துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான், வளர்ச்சி விரைந்து அடைய முடியும்.

