/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
/
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
ADDED : ஜன 13, 2026 05:12 AM

கோவை: ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் காத்திருப்பு போராட்டம், கோவையில் ஆறாவது நாளாக நீடிக்கிறது.
தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னையில் கடந்த டிச. 26ம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே, பணிக்குத் திரும்பாத ஆசிரியர்களின் ஊதியத்தை பிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களின் விவரங்களை பணி பதிவேட்டில் குறிப்பிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் கூறுகையில், '2012ல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி பணியில் சேர்ந்தோம். அப்போது எங்களுக்கு ஊதியம் ரூ.3,170 குறைவாக வழங்கப்பட்டது. தற்போது அந்த ஊதிய வேறுபாடு ஒவ்வொருவருக்கும் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது.
எங்களை போன்ற ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்படுவதாலும், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாததாலும், ஆசிரியர் பட்டயப் படிப்பில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது.
இப்படிப்பை முடித்த ஆயிரக்கணக்கானோர் வேலைக்காக காத்திருக்கின்றனர். தற்போதைய சூழலில், அரசு துவக்கப் பள்ளிகளை மறைமுகமாக மூடுவதற்கான நடவடிக்கையாகவே, அரசின் இந்த போக்கை நாங்கள் பார்க்கிறோம்' என்றனர்.

