/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரங்கநாதர் தேருக்கு பாதுகாப்பு; 'ஷெட்' அமைப்பது எப்போது
/
அரங்கநாதர் தேருக்கு பாதுகாப்பு; 'ஷெட்' அமைப்பது எப்போது
அரங்கநாதர் தேருக்கு பாதுகாப்பு; 'ஷெட்' அமைப்பது எப்போது
அரங்கநாதர் தேருக்கு பாதுகாப்பு; 'ஷெட்' அமைப்பது எப்போது
ADDED : ஏப் 11, 2025 10:45 PM

மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமகத் தேர்த்திருவிழா முடிந்து ஒரு மாதம் ஆகியும், இன்னும் தேருக்கு பாதுகாப்பு தகர ஷெட் போடாமல் உள்ளது.
கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவிலில் மாசிமகத் தேர் திருவிழா, வெகு விமர்சையாக நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம், பந்த சேவை ஆகியவை நடைபெறும். இந்த விழாவில் லட்சம் பக்தர்களுக்கு மேல் பங்கேற்று, அரங்கநாத பெருமாளை வழிபடுவது வழக்கம்.
இந்தாண்டு மாசிமகத் தேர் திருவிழா, கடந்த மாதம் ஆறாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 12ம் தேதி தேரோட்டமும், 13ம் தேதி பந்த சேவையும் நடைபெற்றது. தேரோட்டம் முடிந்து ஒரு வாரம் தேர் அலங்காரத்துடன் இருந்தது. அதன் பின் தேர் அலங்காரத்தை கலைத்தனர்.
தேர்த்திருவிழா முடிந்த பின், தேரை சுத்தம் செய்து, அதற்கு பாதுகாப்பு தகர ஷெட் போடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தேர்த் திருவிழா முடிந்து, ஒரு மாதம் ஆகியும், இன்னும் தேரை சுத்தம் செய்யாமலும், பாதுகாப்பு தகர ஷெட் போடாமலும், பாதுகாப்பு இல்லாத நிலையில் உள்ளது.
தற்போது கோடை காலம் என்பதால், தேர் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் வருகிறது. தேரில் உள்ள மரச்சிலைகளுக்கு எண்ணெய் பூசப்பட்டு உள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன், பாதுகாப்பு தகர ஷெட் போடுவதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் கூறுகையில்,' தேருக்கு புதிய தகர ஷெட் அமைக்கப்பட உள்ளது. அதற்காக தேர் நிற்கும் இடங்களில் நான்கு பக்கம் பில்லர் அமைத்து, அதில் தூண்கள் அமைக்கப்படும். அதனால் தேரை வெளியே எடுத்து வேறு பக்கம் நிறுத்தி இப்பணிகள் செய்யப்பட உள்ளது. தேரை வெளியே எடுத்து நிறுத்திய பிறகு, பச்சை நிற துணியால் பாதுகாப்பாக சுற்றி வைக்கப்படும். பில்லர் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கப்படும்,' என்றனர்.