ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டத்தில் சர்வர் மக்கர்! அறிமுகமான முதல் நாளே தாமதம்
ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டத்தில் சர்வர் மக்கர்! அறிமுகமான முதல் நாளே தாமதம்
UPDATED : ஆக 18, 2026 05:25 AM
ADDED : ஆக 17, 2026 09:21 PM

கோவை: வருகையில்லா ஆவணப்பதிவு ஸ்டார் 3.0 திட்டம் அறிமுகமானது. முதல் நாளே சர்வர் தொய்வடைந்ததால், சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு பணிகள் பாதிக்கப்பட்டன.
மாநிலம் முழுவதும், ஆன்லைன் முறையில் வருகையில்லா பத்திரப்பதிவு திட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆனால் அதற்கேற்ப சர்வரின் திறன் அதிகரிக்கப்படவில்லை.
இதன் காரணமாக, கோவையிலுள்ள பெரும்பாலான சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆன்லைன் பத்திரப்பதிவுகள் தாமதமாகின.
கோவையில் உள்ள 19 சார்பதிவாளர் அலுவலகங்களில், 10 அலுவலகங்களில் மட்டும் 50 ஆவணங்கள் பதிவாயின.
சர்வர் தாமதம் காரணமாக பாக்கி ஆவணங்கள் அடுத்த நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டன. ஏற்கனவே முன்பதிவு செய்து டோக்கன் பெற்று நேரில் வந்தவர்களுக்கு, ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டன.
பதிவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஸ்டார் 3.0 வருகையில்லா ஆவணப்பதிவுத்திட்டத்தில் உள்ள சில குறைகளை, நிவர்த்தி செய்ய வேண்டும். சர்வரின் திறனை அதிகரிக்க வேண்டும். மோசடிக்கு வழிவகுக்கும் சில காரணிகளை மாற்றியமைத்தால்தான் இத்திட்டம் வெற்றி பெறும்' என்றனர்.
