/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி கூட்டத்தில் மிக்சர் சாப்பிடவா நாங்கள்? கவுன்சிலர்கள் 'காரசாரம்'
/
மாநகராட்சி கூட்டத்தில் மிக்சர் சாப்பிடவா நாங்கள்? கவுன்சிலர்கள் 'காரசாரம்'
மாநகராட்சி கூட்டத்தில் மிக்சர் சாப்பிடவா நாங்கள்? கவுன்சிலர்கள் 'காரசாரம்'
மாநகராட்சி கூட்டத்தில் மிக்சர் சாப்பிடவா நாங்கள்? கவுன்சிலர்கள் 'காரசாரம்'
ADDED : செப் 14, 2024 06:11 AM

கோவை : கோவை மாநகராட்சி கவுன்சில் குழு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் எதிர்க்கட்சி கவுன்சிலர்களுக்கு இணையாக, ஆளுங்கட்சி, கூட்டணி கட்சிகவுன்சிலர்களும் குற்றஞ்சாட்டி பேசினர். உச்சகட்டமாக, அ.தி.மு.க., கவுன்சில் குழு தலைவரின் பேச்சை, அனைத்துக்கட்சி கவுன்சிலர்களும் மேஜையை தட்டி, வரவேற்றதுதான் ைஹலைட்!
கோவை மாநகராட்சியில் நேற்று நடந்த மாமன்ற கூட்டத்தில், அ.தி.மு.க., கவுன்சில் குழு தலைவர் பிரபாகரன் பேசுகையில், ''கவுன்சிலர்களை அதிகாரிகள் அசிங்கப்படுத்துகிறார்கள். நாங்கள் ஏதேனும் வேலை சொன்னால் செய்வதில்லை. ஆன்லைன் முறையில் பொதுமக்கள் புகார் பதிவு செய்தால், உடனடியாக அதிகாரிகள் சென்று நடவடிக்கை எடுக்கின்றனர். மிக்சர் சாப்பிட்டுச் செல்லவா கவுன்சிலர்கள் இருக்கிறோம்,'' என கேட்டார்.
இதற்கு மன்றத்தில் இருந்த, இதர கட்சி கவுன்சிலர்கள் அனைவரும் மேஜையை தட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர்.
தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக் செல்வராஜ் கூறுகையில், ''பணி நிறைவு சான்று வழங்காததால், ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளுக்கு, மின் இணைப்பு பெற முடியாமல் இருக்கின்றனர். சொத்து வரி போடப்பட்டுள்ளது; விதிமீறலுக்கு அபராதம் செலுத்துகின்றனர். அதனால், பணி நிறைவு சான்று வழங்க வேண்டும்,'' என்றார்.
ம.தி.மு.க., கவுன்சிலர் தர்மராஜ் பேசுகையில், ''அனுமதியற்ற மனைப்பிரிவில் கட்டிய வீட்டுக்கு சொத்து வரி போடப்பட்டு இருக்கிறது; அபராதம் போடப்பட்டு இருக்கிறது. குடிநீர் இணைப்பு மட்டும் வழங்க மறுப்பது ஏன். மனைப்பிரிவை வரன்முறை செய்து விட்டு வந்தால் மட்டுமே குடிநீர் இணைப்பு தருவோம் என கூறுவது எவ்விதத்தில் நியாயம்,'' என்றார்.
மத்திய மண்டல தலைவர் மீனா பேசுகையில், ''மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட, 10 வார்டுகளில் பாதாள சாக்கடை குழாய்களில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. 1980ல் பதிக்கப்பட்ட குழாய். அடைப்பு நீக்க, 60 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு வாகனம் வாங்குவது தற்காலிக தீர்வாக இருக்கும். நிரந்தர தீர்வு காண, புதிதாக குழாய் பதிக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும்,'' என்றார்.
இவ்வாறு, கவுன்சிலர்கள் பேசினர்.