/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆடு மேய்க்கும் தொழிலாளி கட்டையால் அடித்துக் கொலை
/
ஆடு மேய்க்கும் தொழிலாளி கட்டையால் அடித்துக் கொலை
ADDED : நவ 07, 2025 07:56 AM

அன்னுார்: கோவை மாவட்டம், சூலூர் அருகே முத்து கவுண்டர் புதூரை சேர்ந்த மாரப்பன் மகன் தேவராஜ், 55. ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர் அன்னுார் அருகே பச்சாபாளையத்தில், தாசகாளி தோட்டத்தில் ஆடுகளை பட்டி போட்டு கடந்த ஒரு வாரமாக மேய்த்து வந்தார்.
கடந்த 2ம் தேதி தோட்டத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற தேவராஜ் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மகன் கார்த்திக், 26. அன்னுார் போலீசில் கடந்த 5ம் தேதி புகார் அளித்தார். அன்னுார் போலீ சார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் கோவில்பாளையம் அருகே செரயாம் பாளையத்திலிருந்து பூராண்டாம் பாளையம் செல்லும் சாலையில் மேட்டுக்காட்டு தோட்டத்தில் தேவராஜ் இறந்து கிடந்தது, நேற்று காலை கண்டுபிடிக்கப்பட்டது. அவரது தலை மற்றும் உடலில் சரமாரியாக தாக்கிய ரத்த காயங்கள் இருந்தது. உடல் அருகே கட்டையும் கிடந்தது.
கருமத்தம்பட்டி போலீஸ் டி.எஸ்.பி., தங்கராமன், கோவில்பாளையம் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். கோவையிலிருந்து தடய அறிவியல் நிபுணர்கள் வந்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். செரயாம்பாளையத்திற்கு செல்லும் பாதைகளிலும் உள்ள 'சிசிடிவி' கேமரா காட்சிகளை கோவில்பாளையம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அவரது மொபைலுக்கு வந்த அழைப்புகள் குறித்தும் விசாரித்து வருகின்றனர். தேவராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு கொண்டு செல் லப்பட்டது.

