/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் மீட்டர்களுக்கு தட்டுப்பாடு... தொடாமலேயே ஷாக்! இணைப்பு வழங்குவதில் தாமதம்
/
மின் மீட்டர்களுக்கு தட்டுப்பாடு... தொடாமலேயே ஷாக்! இணைப்பு வழங்குவதில் தாமதம்
மின் மீட்டர்களுக்கு தட்டுப்பாடு... தொடாமலேயே ஷாக்! இணைப்பு வழங்குவதில் தாமதம்
மின் மீட்டர்களுக்கு தட்டுப்பாடு... தொடாமலேயே ஷாக்! இணைப்பு வழங்குவதில் தாமதம்
ADDED : செப் 26, 2024 11:59 PM

கோவை : புதிய மின் இணைப்பு கேட்டு காத்திருப்போர் எண்ணிக்கை உயர்ந்துள்ள நிலையில், மின் மீட்டர்கள் இனியும் கோவைக்கு வந்து சேராததால் மின் நுகர்வோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மின்வாரியம் (தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்) மக்களுக்கு மின்சாரம் தொடர்பான அனைத்து வகையான சேவைகளை வழங்கி வருகிறது.
கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட, 100 வார்டு பகுதி மெட்ரோ என்றும், கோவை வடக்கு, அன்னுார், மேட்டுப்பாளையம், பேரூர் தாலுகாவின் ஒருபகுதி கோவை வடக்காகவும், சூலுார், பல்லடம், மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி ஆகியவை தெற்கு என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.
மூன்று பிரிவுகளுக்கும் மூன்று மேற்பார்வை பொறியாளர்களும், மூன்று அலுவலக எல்லையையும் சேர்த்து ஒரு தலைமைப் பொறியாளர் மின்பணிகளை கவனித்து வருகிறார்.
கோவையில் புதிய மின்இணைப்பு கேட்டு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மின் இணைப்பு கொடுக்க வசதிகள் இருந்தும், போதுமான மின் மீட்டர்கள் இல்லாமல் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. புதிதாக வீடு கட்டுபவர்கள் தற்காலிக இணைப்புவேண்டி விண்ணப்பிக்கும்போது, மின் மீட்டர் இல்லாததால் மின்இணைப்பு விரைவில் வழங்கப்படுவதில்லை.
அதே சமயம் வீடுகள், கடைகள், தொழிற்சாலைகளில் பயன்பாட்டில் உள்ள மின் மீட்டர் பழுதடைந்தால், உடனடியாக மாற்றி தருவதில்லை. அதற்கும் காலதாமதமாகிறது.
மின் மீட்டர் பழுதடைந்து, புதிய மீன் மீட்டர் பொருத்தவும், பழுதுபார்க்கவும் மின்வாரிய அலவலகத்தில் விண்ணப்பித்தாலும் 2 முதல் 3 மாதங்களானாலும் மாற்று மீட்டர் வழங்குவதில்லை. இதனால், மின் நுகர்வோர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
மின் கணக்கீடு செய்ய வருவோரும் முந்தைய மாதங்களை கணக்கீடு செய்து சராசரி மின்கட்டணம் நிர்ணயித்து, சம்பந்தப்பட்ட உதவி பொறியாளர் அலுவலகங்களில் மின் மீட்டர் பழுது குறித்த தகவல் தெரிவிக்கின்றனர்.
ஆனால், மின்மீட்டர் இல்லாததால் மாற்று மீட்டர் பொருத்துவதில்லை. மின்மீட்டர் தட்டுப்பாடு என்று கைவிரிக்கின்றனர். மின் மீட்டர் பற்றாக்குறையால், வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு பெற முடியாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இது குறித்து மின்வாரிய கோவை மண்டல தலைமை பொறியாளர் குப்புராணி கூறியதாவது:
கோவைக்கு வரவேண்டிய மின்மீட்டர்கள் ஒரு சில தினங்களில் வந்துவிடும். மின்இணைப்பிற்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு சீனியாரிட்டி படி மின்இணைப்பு வழங்கப்படும்.
பழுதான மின் மீட்டர்களுக்கு பதிலாக புதிய மீட்டர்கள் வழங்கப்படும். மின்மீட்டர்கள் கோவை வந்து சேருவதில் சிறு காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அது சரிசெய்து விரைவாக வந்து சேர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

