/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை போலீஸ் ஸ்டேஷன்களில் ஆள் பற்றாக்குறை: தேர்தல் வருவதால் பணிகள் பாதிக்குமா?
/
கோவை போலீஸ் ஸ்டேஷன்களில் ஆள் பற்றாக்குறை: தேர்தல் வருவதால் பணிகள் பாதிக்குமா?
கோவை போலீஸ் ஸ்டேஷன்களில் ஆள் பற்றாக்குறை: தேர்தல் வருவதால் பணிகள் பாதிக்குமா?
கோவை போலீஸ் ஸ்டேஷன்களில் ஆள் பற்றாக்குறை: தேர்தல் வருவதால் பணிகள் பாதிக்குமா?
ADDED : பிப் 18, 2026 05:17 AM

கோவை:கோயம்புத்தூர் போலீஸ் நிலையங்களில் 200 போலீஸ்காலி இடங்கள் நிரப்பப்படாததால், தேர்தல் பாதுகாப்பு பணியில் பாதிப்பு ஏற்படலாம் என அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
கோவை மாநகர காவல் துறையை தெற்கு, வடக்கு என இரண்டாக பிரித்துள்ளனர். தெற்கில் 11 ஸ்டேஷன்களும், வடக்கில் 9 ஸ்டேஷன்களும் உள்ளன. சட்டம் ஒழுங்கு, விசாரணை, போக்குவரத்து ஆகியவை தவிர மகளிர் போலீஸ், சைபர் கிரைம் உள்ளிட்ட 10 சிறப்பு பிரிவுகள் உள்ளன. 5 துணை கமிஷனர்கள் நிர்வகிக்கின்றனர்.
அனைத்து நிலையங்களிலுமாக 2,900 போலீஸ் பணியிடங்கள் உள்ளன. பணி ஓய்வு, இட மாற்றம் ஆகியவற்றால் 234 இடங்கள் காலியாகி விட்டன.
34 இடங்களுக்கு சமீபத்தில் ஆட்கள் நியமிக்கப்பட்டனர். அனைவரும் அதிகாரிகள். கான்ஸ்டபிள் மட்டத்தில் 200 இடங்கள் இன்னும் காலியாக இருக்கின்றன. பற்றாக்குறையால் வேலைப்பளு அதிகரித்துள்ளது. லீவு எடுக்க முடியாமல் தவிப்பதாக கூறுகின்றனர். காலி இடங்களை நிரப்ப அரசுக்கு பலமுறை அறிக்கை அனுப்பியும் பலன் இல்லை.
மாநகர எல்லைகளை விரிவுபடுத்தியதால், பொறுப்புகள் அதிகமாகி விட்டன. எனவே மருதமலை, இருகூர், காளப்பட்டி ஆகிய 3 இடங்களில் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கவும் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.
இரண்டு வருடம் கடந்தும் இந்த கோரிக்கைகள் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது. இந்த நிலையில், விரைவில் தேர்தல் வருவதால் போலீசுக்கு வேலை அதிகமாகும்.
'ஸ்டேஷன் விசாரணை மட்டுமின்றி, சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு பணி, ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை ஒழுங்குபடுத்துவது, கண்காணிப்பு, ரோந்து, வி.ஐ.பி. பந்தோபஸ்து, போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல், குற்ற விசாரணை, தனிப்படை, கோர்ட் வாய்தா என்று ஏகப்பட்ட வேலைகள் இருக்கின்றன. தேர்தல் அறிவிப்பும் வந்துவிட்டால் என்ன ஆகுமோ தெரியவில்லை' என்று நமது நிருபரிடம் போலீசார் தெரிவித்தனர்.
உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, '200 இடங்கள் காலியாக இருப்பது உண்மை தான். ஆனால், எந்த வேலையும் பாதிக்கவில்லை. காலி இடங்கள் சீக்கிரம் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கிறோம். புதிய ஸ்டேஷன்கள் பற்றி அரசுதான் அறிவிக்க வேண்டும்'என்றார்.

