/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூலப்பொருளான தேங்காய் மட்டை தட்டுப்பாடு; நார் தொழிற்சாலைகள் இயக்குவதில் சிக்கல்
/
மூலப்பொருளான தேங்காய் மட்டை தட்டுப்பாடு; நார் தொழிற்சாலைகள் இயக்குவதில் சிக்கல்
மூலப்பொருளான தேங்காய் மட்டை தட்டுப்பாடு; நார் தொழிற்சாலைகள் இயக்குவதில் சிக்கல்
மூலப்பொருளான தேங்காய் மட்டை தட்டுப்பாடு; நார் தொழிற்சாலைகள் இயக்குவதில் சிக்கல்
ADDED : மே 20, 2025 11:47 PM
பொள்ளாச்சி; மூலப்பொருளான தேங்காய் மட்டை தட்டுப்பாட்டால், தென்னை நார் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல தொழிற்சாலைகள் அரை நாள் மட்டுமே இயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில், 23 ஆயிரம் தென்னை நார் தொழிற்சாலைகளும், தமிழகத்தில், 27 மாவட்டங்களில், ஏழாயிரம் தொழிற்சாலைகளும் உள்ளன. இந்தியாவில் இருந்து, ஆண்டுதோறும், 9 லட்சத்து, 81 ஆயிரம் மெட்ரிக் டன் தென்னை நார் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில், தமிழகத்தில் இருந்து மட்டும், ஆறு லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், 90 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், தென்னையில் நோய் தாக்குதல் போன்ற பல்வேறு காரணங்களால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தேங்காய் மட்டைக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நார் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட தென்னை நார் மற்றும் சார்பு பொருட்கள் உற்பத்தியாளர் சங்க துணை தலைவர் முருகானந்தம் கூறுகையில், ''கடந்த, இரண்டு ஆண்டுகளாக உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது, தென்னை நார் தயாரிக்க தேவையான மூலப்பொருளான தேங்காய் மட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் இருந்து தேங்காய் மட்டையை வாகனங்களில் கொண்டு வரப்படுகிறது. ஆனால், தென்னை நார் விலையும், நார் துகள் விலையும் தினமும் குறைந்து வரும் சூழலில், இத்தொழிலை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பை ஊக்குவிக்க வேண்டும்,'' என்றார்.
கோவை மாவட்ட தென்னை நார் மற்றும் சார்பு பொருட்கள் உற்பத்தியாளர் சங்க முன்னாள் தலைவர் சுதாகர் கூறுகையில், ''தென்னை நார் தயாரிப்பதற்கு மூலப்பொருளான மட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது, ஒரு மட்டை விலை, 2.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஆனால், நார் விலை கிலோ, 10 ரூபாயாக குறைந்துள்ளது. இதனால், தென்னை நார் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மட்டை தட்டுப்பாட்டால், அரை நாள் மட்டுமே பல நிறுவனங்கள் இயங்குகின்றன. தொழிலாளர்களுக்கு முழுமையான வேலை வழங்க முடியவில்லை. பல நிறுவனங்கள், உற்பத்தியில்லாமல் மூடும் நிலை உள்ளது,'' என்றார்.