UPDATED : நவ 29, 2026 07:13 PM
ADDED : நவ 29, 2026 07:13 PM
கோவை: கோவையில் 59 மற்றும் பொள்ளாச்சியில் 39 கால்நடை மருந்தகங்கள் மற்றும் பன்முக மருத்துவமனை, கிளை நிலையங்கள் என, மாவட்டத்தில் 118 கால்நடை சிகிச்சை மையங்கள் உள்ளன. ஆடு, மாடு என, 2.32 கால்நடைகளுக்கு இங்கு சிகிச்சை தரப்படுகிறது.
கால்நடைகளுக்கு தடுப்பூசி, அறுவை சிகிச்சை, செயற்கை கருவூட்டல், கண்காணித்தல் போன்ற பணிகளுக்கு உதவியாளர் பணி முக்கியமானது. இவர்கள் டாக்டர்களுக்கு துணையாக இருந்து மருந்து எடுத்து தருவது, மருத்துவ கருவிகளை சுத்தம் செய்வது, சுடுதண்ணீர் வைப்பது உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர்.
கோமாரி நோய் தடுப்பூசி செலுத்துதல் போன்ற முகாம்களிலும் இவர்கள் முக்கிய பணிகளை செய்கின்றனர். மாவட்டம் முழுவதும் நிலவும் 80 உதவியாளர் காலிப்பணியிடங்களால் கால்நடை டாக்டர்கள் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர்.
சினை ஊசி, ‘குளுக்கோஸ்’ செலுத்துதல், பணிகள் முடிந்து கால்நடைகளின் கோமியம், சாணம் சுத்தம் செய்யும் பணிகளையும் டாக்டர்கள் செய்ய வேண்டியுள்ளது. கால்நடைகளுக்கு தனியே சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பதாக ஓராண்டாக இங்குள்ள டாக்டர்கள் புலம்பி வருகின்றனர்.
‘‘உதவியாளர் பணியிடம் நிரப்பும் விஷயத்தில் நீதிமன்ற வழக்கு இருந்தது. தற்போது வழக்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில் துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். இதையடுத்து, காலிப்பணியிடங்கள் குறித்து பட்டியல் தயாரித்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளோம்.
80 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஓய்வு பெறுவதால் ஏற்படும் காலிப்பணியிடங்கள் குறித்தும் பட்டியல் தயாரிக்கிறோம். கூடிய விரைவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது,’’ என்கிறார், மண்டல கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் சித்ரா.
மாவட்டத்தில் 70 பெண் டாக்டர்கள் உள்ளனர். உதவியாளர் இல்லாமல் அதிகம் சிரமப்படுவது இவர்கள்தான். எனவே, தாமதமின்றி காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மருந்தகங்களில் தண்ணீர் வசதி, மோசமான கழிப்பறைகளின் வசதியை மேம்படுத்த வேண்டும் என்பது டாக்டர்களின் பிரதான கோரிக்கை.
