/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வைக்கோலுக்கு மாற்றாக 'சைலேஜ்' தயாரிப்பு மானிய திட்டத்தில் அசத்தும் விவசாயிகள்
/
வைக்கோலுக்கு மாற்றாக 'சைலேஜ்' தயாரிப்பு மானிய திட்டத்தில் அசத்தும் விவசாயிகள்
வைக்கோலுக்கு மாற்றாக 'சைலேஜ்' தயாரிப்பு மானிய திட்டத்தில் அசத்தும் விவசாயிகள்
வைக்கோலுக்கு மாற்றாக 'சைலேஜ்' தயாரிப்பு மானிய திட்டத்தில் அசத்தும் விவசாயிகள்
ADDED : ஜன 02, 2024 11:40 PM

உடுமலை:மத்திய அரசின் மானிய திட்டத்தின் கீழ், வைக்கோலுக்கு மாற்றாக 'சைலேஜ்' புல் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
உடுமலை சுற்றுப்பகுதிகளில், பால் உற்பத்திக்காக அதிகளவு மாடுகள் வளர்க்கப்படுகின்றன. மாடுகளுக்கு உணவாகும் வைக்கோலில் போதுமான புரதம் மற்றும் சத்து பொருள்கள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. அதற்கு மாற்றாக 'சைலேஜ்' புல் பயன்படுத்துவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
உடுமலை லிங்கமநாயக்கன்புதுாரைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மக்காச்சோள பயிரின் வாயிலாக 'சைலேஜ்' புல் தயாரித்து வருகிறார். அவை, 20 முதல் 25 கிலோ எடையில் 'பேக்கிங்' செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
இது குறித்து, அவர் கூறியதாவது:
பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை மேம்படுத்தும் திட்டத்தில், வங்கிக் கடன் மற்றும் அரசு மானியத்தில் டிராக்டர் மற்றும் 'சைலேஜ்' இயந்திரம் வாங்கினேன். 'சைலேஜ்' தயார் செய்து பண்ணையில் உள்ள கால்நடைகளுக்கு வழங்குவது மட்டுமின்றி, பிற விவசாயிகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சைலேஜ் வழங்குவதால், கால்நடைகள் ஆரோக்கியத்துடன் இருப்பதுடன், பால் உற்பத்தி அதிகரிக்கும். இதனால், அடர் தீவனத்திற்கு செலவிடும் தொகை, பாதியாக குறைந்துள்ளது. இதற்கு, 65 முதல் 85 நாள் வயதுடைய மக்காச்சோளப் பயிர், சுற்றுப்பகுதி விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
உடுமலை கால்நடை உதவி இயக்குனர் ஜெயராம் கூறியதாவது:
பால் பிடிக்கும் தருணத்தில் உள்ள மக்காச்சோளப் பயிரின் தண்டு பகுதியை, 'சாப் கட்டர்' கருவி வாயிலாக, இரண்டு அங்குலத்துக்கு மிகாமல் துண்டுகளாக வெட்டப்படுகிறது. அவை, 2 முதல் 3 அடி உயரம், 100 கிராம் எடை குறைவில்லாமல் உள்ள காற்று புக முடியாத பிளாஸ்டிக் பையில் இறுக்கத்துடன் நிரப்பப்படும்.
அதன்பின், சணல் கயிற்றால் மிக இறுக்கமாகக் கட்டப்படும். எந்த நிலையிலும் பைக்குள் காற்று இருக்கக் கூடாது. இந்த பேக்கிங் சுமார், 20 முதல் 25 கிலோ எடை இருக்கும். இதனை அப்படியே வைக்கலாம்.
மூன்று வாரம் கழித்தால், 'அனிரோபிக்' நிலையை தாண்டி, ஆல்கஹால் மணம் வீசும். இதனால், உள்ளே இருக்கும் பொருள்கள் கெட்டு விடாமல் இருக்கும். இதனை, வருடம் முழுவதும், ஒரே மாதிரியான சுவையும் சத்தும் மாறாமல் ஆடு, மாடுகளுக்கு அளிக்கலாம்.
நுாறு சதவீதம் வெளி இடுபொருள் எதுவும் இல்லாத இயற்கை முறை தயாரிப்பாகும். இதன் வாயிலாக, கிராமப்புற இளைஞர்கள் தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும். தீவனப் பற்றாக்குறை காலங்களில் 'சைலேஜ்' புல் பயன்பாடு முக்கியமானதாகும்.
இவ்வாறு, அவர் கூறினார்.