sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

முறையாக ஏலம் விடாமல் குப்பையாக குவிந்த.. எலும்புக்கூடான வாகனங்கள்!

/

முறையாக ஏலம் விடாமல் குப்பையாக குவிந்த.. எலும்புக்கூடான வாகனங்கள்!

முறையாக ஏலம் விடாமல் குப்பையாக குவிந்த.. எலும்புக்கூடான வாகனங்கள்!

முறையாக ஏலம் விடாமல் குப்பையாக குவிந்த.. எலும்புக்கூடான வாகனங்கள்!


ADDED : மார் 12, 2025 10:34 PM

Google News

ADDED : மார் 12, 2025 10:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நிருபர் குழு -

பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதிகளில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், முறையாக ஏலம் விடாமல் குப்பையாக குவிந்து கிடக்கின்றன. வெயிலுக்கு காய்ந்து, மழைக்கு நனைந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கின்றன.

பொள்ளாச்சி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் இருந்தும், இவ்வழியாக வெளிமாவட்டத்தில் இருந்தும், கேரளாவுக்கு ரேஷன் அரிசி படுவதை தடுக்க, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் குடிமைப்பொருள் அதிகாரிகள் தீவிர கணகாணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபோன்று, போலீசார் வாகன பரிசோதனையின் போதும், கடத்தல் சம்பவங்களுக்கும், சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர்.

பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம் விடப்பட்டு, அதன் வாயிலாக கிடைக்கும் தொகை அரசு கருவூலத்தில் செலுத்தப்படும்.

ஆனால், பறிமுதல் வாகனங்கள் ஏலம் விடப்படாமல், மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும், வீணாகி வருகின்றன. பயன்படுத்த முடியாத அளவுக்கு துருப்பிடித்து உருக்குலைந்து காணப்படுகின்றன.

முறையாக ஏலம் விட்டால் அரசுக்கு வருவாய் கிடைக்கும்; அந்த வாகனங்கள் நிறுத்தியிருக்கும் இடங்களும் சுத்தமாகும். ஆனால், ஏலம் விடுவதற்கு எவ்வித உத்தரவும் வராததால், குப்பை போல வாகனங்கள் குவிந்து கிடக்கின்றன.

பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களை, அரசு கல்லுாரி ரோட்டில், எவ்வித பாதுகாப்புமின்றி வரிசையாக நிறுத்தி வைத்துள்ளனர். இந்த வாகனங்களில் இருக்கும் பாகங்கள் களவாடப்பட அதிக வாய்ப்புள்ளது.

ஓர் ஆண்டில்...


வட்டார போக்குவரத்து அலுவலகம் வாயிலாக, போக்குவரத்து விதிமுறை மீறல், வரி செலுத்தாத வாகனங்களுக்கு அபராதம் மற்றும் வரி வசூல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.கடந்த ஆண்டில், 1,944 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. வரி மற்றும் அபராத தொகையாக ஒரு கோடியே, 12 லட்சத்து, 84 ஆயிரத்து, 292 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ., ஆபீசில் இருந்த வாகனங்கள் அபராதம் செலுத்தி மீட்கப்பட்டுள்ளன.

விபத்துக்குள்ளான வாகனங்கள், பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் உட்பட, 24 வாகனங்கள் பொள்ளாச்சி போலீசார் சார்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

351 வாகனங்கள்


குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீசார் கடந்த ஆண்டில் ரேஷன் அரிசி கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களில், 430 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். அதில், ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக, 406 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 151.79 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இருசக்கர வாகனங்கள் - 183, மூன்று சக்கர வாகனங்கள் - 2, நான்கு சக்கர வாகனங்கள் - 56, என, மொத்தம், 241 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த, ஐந்து ஆண்டுகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 351 வாகனங்கள் உள்ளன. இதில், 25 வாகனங்கள், கடந்த, 10ம் தேதி பொது ஏலம் விடப்பட்டது.இதே போன்று, மற்ற வாகனங்களையும் ஏலம் விடப்படும் என்கின்றனர் போலீசார்.

ஏழு ஆண்டுகளாக ஏலம் விடல!


உடுமலை சப்-டிவிஷன் ஸ்டேஷன்களில், திருட்டு, கஞ்சா, கொலை, விபத்து மற்றும் கனிம வளக்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம், தளி, கணியூர், அமராவதி நகர் உள்ளிட்ட ஸ்டேஷன்களில், இரு சக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் என, ஏழு ஆண்டுகளில், 1,518 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நீதிமன்றங்களில் வழக்கு நடந்து வரும் நிலையில், வழக்கு தொடர்புடைய வாகனங்களாக போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள், வெயிலிலும், மழையிலும் நிறுத்தப்பட்டுள்ளதால், துருப்பிடித்தும், உடைந்தும், முக்கிய பாகங்கள் திருடப்பட்டும் வீணாகி வருகின்றன. வழக்கில் தொடர்புடைய வாகனங்களை, உரிமையாளர்கள் நீதிமன்றத்தில், 'ரிட்டன் ஆப் பிராப்பர்ட்டி' மனு தாக்கல் செய்து, வழக்கு தீர்ப்பு முடிவில், ஒப்படைப்பதாக உறுதியளித்து, அதற்குரிய சொத்து மதிப்பு காட்டி எடுத்துக்கொள்ளலாம்.

மேலும், பல ஆண்டுகள் உரிமை கோரப்படாதது மற்றும் வழக்கின் தன்மையை பொறுத்து, வாகனங்களை, அரசுடமையாக்க வழிவகை உள்ளது. எஸ்.பி., மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் இதற்குரிய, கடிதம் அளித்து, போலீசார் அனுமதி பெற்று வாகனங்களை ஏலம் விட்டு, அரசு நிதியில் சேர்க்கலாம்.

ஆனால், கடந்த ஏழு ஆண்டுகளாக போலீசார் கண்டு கொள்ளாததால், உரிமையாளருக்கும் பயன்படாமல், அரசுக்கும் பயனில்லாமல், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் வீணாகி, பழைய இரும்புக்கு கூட லாயக்கற்றதாக மாறியுள்ளன.

சப்-டிவிஷனில் 128 வாகனங்கள்!


வால்பாறை உட்கோட்டத்தில், ஆனைமலை, கோட்டூர், ஆழியாறு, காடம்பாறை, வால்பாறை, முடீஸ், ேஷக்கல்முடி ஆகிய போலீஸ் ஸ்டேசன்கள் உள்ளன. உட்கோட்டத்தில், குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து, ரேஷன் அரிசி கடத்தல், அதிவேகமாக வாகனங்களை இயக்கியது, உயிரிழப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வழங்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், பறிமுதல் செய்யப்பட்டு, அந்தந்த போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டுள்ளன.

மொத்தம், 128 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வழக்கு முடிந்தும் சில வாகனங்களை எடுத்து செல்லாததால், இங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன, என்கின்றனர் போலீசார்.

வால்பாறை ஸ்டேஷன் வளாகத்தில், மூன்று ஆண்டுகளில் பறிமுதல் செய்யப்பட்ட, பைக், கார் உட்பட, 32 வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இடத்தை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்


கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில், கடந்த 2012 முதல் கஞ்சா கடத்தல், வாகன திருட்டு, கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய, 48 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஸ்டேஷன் வளாகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நெகமம் போலீஸ் ஸ்டேஷனில், கடந்த 2011ம் ஆண்டிலிருந்து, குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 35 வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களுக்கு உண்டான வழக்குகள் அனைத்தும் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், பல ஆண்டுகளாக போலீஸ் ஸ்டேஷனில் வீணாகி வருகின்றன.

406 -- பொள்ளாச்சியில் கடந்தாண்டில் பதிவான ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகள்.

241 -- ரேஷன் அரிசி கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்.

351 -- கடந்த ஐந்தாண்டுகளாக ஏலம் விடப்படாத பறிமுதல் வாகனங்கள்.

24 - பொள்ளாச்சி போலீஸ் ஸ்டேஷன்களில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்.

1,518 - உடுமலையில் ஏழு ஆண்டுகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்.






      Dinamalar
      Follow us