/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இத்தனை காரணங்களா தீபாவளியைக் கொண்டாட!
/
இத்தனை காரணங்களா தீபாவளியைக் கொண்டாட!
ADDED : அக் 14, 2025 10:03 PM

தீ பாவளி, ஹிந்துக்கள் பண்டிகை என பொதுவாக குறிப்பிடப்பட்டாலும், சமணம், சீக்கியம் என இந்தியா முழுக்க வெவ்வேறு மதத்தினர் பல்வேறு காரணங்களுக்காக கொண்டாடும் பண்டிகையாக உள்ளது.
தமிழகத்தில், நரகாசுரனை, சத்தியபாமாவுடன் இணைந்து கிருஷ்ணர் வதம் செய்த நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.
சக்தி, 21 நாட்கள் கேதாரகவுரி விரதம் முடித்த பிறகு, சிவன் சக்தியை தனது பாகமாக ஏற்று உமையொரு பாகனாக நின்ற நாளே தீபாவளியாக கொண்டாடப்படுவதாக ஸ்கந்த புராணம் கூறுகிறது.
ராமச்சந்திர மூர்த்தி, 14 ஆண்டு வனவாசத்துக்குப் பின், ராவணனை வென்று, சீதையை மீட்டு அயோத்தி திரும்புவதை அந்நாட்டு மக்கள் விளக்கேற்றி வரவேற்ற நாளே தீபாவளி என வடநாட்டில் கொண்டாடுகின்றனர்.
சீக்கியர்களைப் பொறுத்தவரை, அவர்களின் குரு ஹர்கோபிந்த் சிங், அவருடன் 52 ஹிந்து அரசர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பந்தி சோர் திவாஸ் என்ற பெயரில் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.
பவுத்தர்களில் ஒரு பிரிவான நேவார் பவுத்தர்கள், லட்சுமியை வணங்குவதன் வாயிலாக தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.
சிலர் பாற்கடலைக் கடைந்தபோது லட்சுமி பிறந்ததை நினைவுகூர்ந்து, செல்வத்தின் அதிபதியான அவரை, தீபாவளி நாளில் வணங்குகின்றனர்.
அசாம், ஒடிசா, மே.வங்கத்தில், தீபாவளி தினத்தில், லட்சுமிக்கு பதில் மகா காளியை வணங்குகின்றனர்.
உத்தரப்பிரதேசத்தில், பிரிஜ் பகுதியில், கோவர்த்தன பூஜையாக கொண்டாடுகின்றனர்.
மார்வாரிகள், புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். தீபாவளிக்கு அடுத்த புதுக்கணக்கு ஆரம்பித்து கொண்டாடுகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில், இரண்டு நாட்கள் தீபாவளி கொண்டாடுகின்றனர். முதல்நாள் நரக சதுர்த்தசி, இரண்டாம் நாள் அமாவசை தினம் தீபாவளி. பெரும்பாலும் தென்னிந்தியா முழுக்க நரகாசுரனை வதம் செய்த நாளாகவே தீபாவளி கொண்டாடப்படுகிறது.
இந்தியா முழுக்க கொண்டாடப்பட்டாலும், வெவ்வேறு மொழிபேசும் மக்கள், வெவ்வேறு காரணங்களுக்காக, வெவ்வேறு விதமாக தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். ஏன் ஒரே மாநிலத்தில் கூட வெவ்வேறு விதங்களில் கொண்டாடுகின்றனர்.
கோவை மாவட்டத்தில், கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூர் கிராமத்தில், தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் மயிலந்த தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். சுற்றுப்பகுதியைச் சேர்ந்த கிராமத்தினர் இணைந்து, இங்கு அதிக எண்ணிக்கையில் வசிக்கும் இஸ்லாமிய மக்களோடு இணைந்து மயிலந்தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.
பொதுயுகம் 7ம் நூற்றாண்டில் பேரரசர் ஹர்ஷவர்த்தனர் எழுதிய நாகநந்தா நூலில், தீபப்பிரதிபதோத்சவம் எனக் குறிப்பிடப்படுவது, தீபாவளித் திருநாள்தான் என அறிஞர்கள் கூறுகின்றனர்.
பாரசீக பயணி அல் பிருணி, வெனிஸ் பயணி நிக்கோலோ டி கான்டி, போர்த்துக்கீசிய பயணி டாமிங்கோ பயஸ் உள்ளிட்ட வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்பிலும் தீபங்களை ஏற்றிக் கொண்டாடிய விழாவைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
இப்படி, எண்ணற்ற காரணங்களுக்காக கொண்டாடப்படும் ஒரே பண்டிகையாக தீபாவளி உள்ளது. காரணம் எதுவாயினும் இருள் விலகி, மகிழ்ச்சி ஒளிர்வதற்கான பண்டிகை கொண்டாட்டத்துக்குரியது என்பது போதாதா, தீபாவளியைக் கொண்டாட!