மண் கலந்து வரும் தண்ணீர்....பழுதாகும் முக்கிய குடிநீர் குழாய்கள்..சவால்களை சமாளித்து 12 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம்
மண் கலந்து வரும் தண்ணீர்....பழுதாகும் முக்கிய குடிநீர் குழாய்கள்..சவால்களை சமாளித்து 12 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம்
UPDATED : செப் 10, 2026 07:01 PM
ADDED : செப் 10, 2026 06:43 PM
மேட்டுப்பாளையம்:பில்லுார் அணை நீர் பிடிப்பு பகுதிகளிலும், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், கேரளாவிலும் எதிர்பார்த்த பருவமழை இல்லை. இதன் காரணமாகவும், திடீரென பெய்யும் கன மழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாகவும் பவானி ஆறு தண்ணீர் மண் கலந்து கலங்களாக செல்கிறது.
பவானி ஆற்றில் தண்ணீர் இப்படி மண் கலந்து செல்வதால், விளாமரத்தூரில் குடிநீர் எடுக்கும் பணி அவ்வப்போது பாதிக்கப்படுகின்றன. அதே போல், 20 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் கொண்டு செல்லும் குழாய்களில் பழுது ஏற்படுவதாலும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது. இதை சமாளித்து மேட்டுப்பாளையம் நகராட்சி குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து, மேட்டுப்பாளையம் நகராட்சி உதவி பொறியாளர் பிரபாகர் கூறுகையில், பவானி அற்றில் தண்ணீர் கலங்களாக வந்தால், 6 முதல் 8 மணி நேரம் வரை குடிநீர் தேவைக்கான தண்ணீரை எடுக்கமாட்டோம். விளாமரத்தூரில் இருந்து 24 மணி நேரத்தில் 12 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைக்காக எடுக்கப்படுகிறது. தண்ணீர் கலங்களாக வரும் போது 12 மணி நேரத்தில் அந்த தண்ணீரை எடுக்கும் சவால் உள்ளது.
மேட்டுப்பாளையம் ஊட்டி ரோட்டில் நகராட்சிக்குட்பட்ட எல்.எஸ்.புரம் பகுதிக்கு செல்லும் பிரதான குடிநீர் குழாய்களில் கசிவு ஏற்பட்டது. இந்த குழாய் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. உடனடியாக சாலையை தோண்டி ஒரு நாளில் இதை சரிசெய்தோம். குடிநீர் விநியோகம் தொய்வு இன்றி நடக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம், என்றார்.
இதுகுறித்து, மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வின் கூறுகையில், குடிநீர் தடையின்றி விநியோகிக்க நகராட்சி சார்பில் பல்வேறு சவால்களை சமாளித்து வருகிறோம். மேட்டுப்பாளையம் மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். கண்டிப்பாக கார், பைக், வீடுகளை குடிநீர் கொண்டு கழுவக்கூடாது. அப்படி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
