
பெரிய வண்டியில் வராதீங்க
மருதமலை சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு, பொங்கல் பண்டிகையை ஒட்டி, வரும் 14 முதல் 19 வரை தொடர் விடுமுறை நாட்களில், கார்களில் பக்தர்கள் வருகை தர வேண்டாம். இரண்டு சக்கர வாகனங்கள் மூலமாகவும், மலைப்படிகள் வழியாகவும், திருக்கோவிலுக்கு சொந்தமான பஸ்களிலும் பக்தர்கள் வரலாம் என்று, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள் போராட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர், 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை கலெக்டர் அலுவலகம் முன், மறியல் போராட்டம் நடத்தினர். ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், கிராம ஊராட்சிகளை பேரூராட்சி மற்றும் நகராட்சிகளாக தரம் உயர்த்தும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஊறுகாய் தயாரிக்க பயிற்சி
கோவை வேளாண் பல்கலையில், மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிக்க இரண்டு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில், சாம்பார் பொடி, ரசப்பொடி, கறிமசால் பொடி, பருப்பு பொடி, சிக்கன் 65 மசாலா பொடி, ரெடிமேட் பேஸ்ட், காளான் ஊறுகாய், வாழைப்பூ ஊறுகாய், பாகற்காய் ஊறுகாய், கத்தரிக்காய் ஊறுகாய், வெங்காய ஊறுகாய் ஆகியவை தயாரிக்க கற்பிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 94885 18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.