ADDED : டிச 06, 2025 06:31 AM
ரயில் நேர மாற்றம் கோவை: மாவேலிபாளையம், சங்ககிரி துர்க்கம் ரயில் நிலையங்களில் புனரமைப்புப் பணிகள் நடப்பதால், போத்தனூரில் இருந்து புறப்படும் பரூணி வாராந்திர சிறப்பு ரயில், சனிக்கிழமைகளில் காலை 11:50 மணிக்கு பதில், மதியம் 12:40 மணிக்குப் புறப்படும். நேர மாற்றம் 27ம் தேதி வரை அமலில் இருக்கும்.
ஜெ., நினைவு தினத்தில் அன்னதானம் அன்னுார்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு, கரியாம்பாளையத்தில் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், நேற்று 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஜெ., படத்திற்கு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் சாய் செந்தில் உள்பட பலர் பங்கேற்றனர். அன்னூர் நகரில் நடந்த நிகழ்ச்சியில், கட்சியின் வர்த்தக அணி மாநில துணைத்தலைவர் அம்பாள் பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் மேட்டுப்பாளையம்: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஐந்து பேர் தலைமையில் மருத்துவக் குழுவினர், 114 மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனை செய்தனர். காரமடை வட்டார வளமைய மேற்பார்வையாளர் மைதிலி, ஆசிரியர் பயிற்றுநர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.
மிளிரப்போகிறது அரசுப் பள்ளி சுந்தராபுரம்: தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் சீரமைப்பு பணி துவங்கியது. ஒரு நிறுவனத்தின் லாபத்தின் ஒரு பகுதியை, சமுதாய நலனுக்காகவும், சமூக மேம்பாட்டுக்காகவும், சமூக பொறுப்புணர்வு நிதி ஒதுக்கப்படுகிறது. கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உட்பட பல்வேறு சமூகப் பணிகளுக்காக, இந்நிதி ஒதுக்கப்படுகிறது.

