/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பல்கலை கராத்தே போட்டியில் 'சொதப்பல்' ;'கடமைக்கு கூடாது' என வீரர்கள் எதிர்பார்ப்பு
/
பல்கலை கராத்தே போட்டியில் 'சொதப்பல்' ;'கடமைக்கு கூடாது' என வீரர்கள் எதிர்பார்ப்பு
பல்கலை கராத்தே போட்டியில் 'சொதப்பல்' ;'கடமைக்கு கூடாது' என வீரர்கள் எதிர்பார்ப்பு
பல்கலை கராத்தே போட்டியில் 'சொதப்பல்' ;'கடமைக்கு கூடாது' என வீரர்கள் எதிர்பார்ப்பு
ADDED : நவ 24, 2024 11:46 PM
கோவை ; பல ஆண்டு போராட்டத்துக்கு பிறகு பாரதியார் பல்கலை கராத்தே போட்டிகள் நடத்துவதாக தேதி அறிவிக்கப்பட்டநிலையில், முறையாக திட்டமிடாத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலையின்கீழ், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில், 120க்கும் மேற் பட்ட கல்லுாரிகள் செயல்படுகின்றன. கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளை, பல்கலை உடற்கல்வித் துறை நடத்தி வருகிறது.
அதன்படி, மாணவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தும் விதமாக, கபடி, டேக்வாண்டோ, பேட்மின்டன், கால்பந்து உள்ளிட்ட போட்டிகளை நடத்தி வருகிறது. இதர பல்கலைகளில் கராத்தே போட்டி இடம்பெறும் நிலையில் பாரதியார் பல்கலையில் இதுவரை நடத்தப்படவில்லை.
இந்நிலையில், மாணவர்கள், உடற்கல்வி இயக்குனர்களின் பல வருட கோரிக்கையாக இருந்த கல்லுாரிகளுக்கு இடையேயான கராத்தே போட்டிகளை நடத்த பல்கலை முடிவு செய்தது. இதுதொடர்பாக, கடந்த, 21ம் தேதி பாரதியார் பல்கலையில் உடற்கல்வித் துறை சார்பில் கல்லுாரி முதல்வர்களுக்கு கடிதமும் அனுப்பப்பட்டது.
அதில், 'கல்லுாரிகளுக்கு இடையே ஆண்கள், பெண்களுக்கான கராத்தே போட்டி, 24ம் தேதி(நேற்று) திருப்பூர் நிப்ட் டீ கல்லுாரியில் நடத்தப்படும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. 'கட்டா', 'குமிட்டி' என ஒவ்வொன்றிலும் தலா ஐந்து பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது.
இச்சூழலில், இரு நாட்களில் வீரர், வீராங்கனைகள் பதிவு உள்ளிட்ட நடைமுறைகளுக்கு கால அவகாசம் போதாது என்பதால் போட்டியை ஒத்திவைக்குமாறு கல்லுாரிகளிடம் இருந்து எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உடற்கல்வி இயக்குனர்கள் கூறுகையில்,'சில கல்லுாரிகளுக்கு, 22ம் தேதிதான் தகவல் கிடைத்தது.
இப்படியிருக்க ஒரே நாளில் எப்படி போட்டிக்கு தயாராக முடியும்; எனவே, தேதியை மாற்ற கோரினோம். கடமைக்கென்று போட்டியை நடத்தாமல் மாணவர்களின் எதிர்காலம் கருதி நல்ல முறையில் நடத்த வேண்டும்' என்றனர்.
இதிலும் சிக்கல்!
வீரர், வீராங்கனைகள் சிலரது சான்றிதழ்களில் 'ஓபன்' என குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில, தேசிய அளவிலான போட்டிகள் என குறிப்பிடாத நிலையில் எந்த தகுதி அடிப்படையில் போட்டிக்கு மாணவர்களை அனுமதிப்பது என்ற குழப்பமும் நிலவியது.
இருப்பினும் மாணவர்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளித்து போட்டியை நடத்த பல்கலை முடிவு செய்துள்ளது.
பதிவை பொறுத்து!
வரும், 27ம் தேதி(புதன்) கராத்தே போட்டி நடத்த திட்டமிட்டுள்ளோம். அதேசமயம், பருவ தேர்வுகளும் கல்லுாரிகளில் நடந்துவருகிறது. எனவே, வீரர், வீராங்கனைகளின் பதிவை பொறுத்து வேறு தேதியிலும் நடத்த பரிசீலித்துவருகிறோம்.
- ராஜேஸ்வரன், உடற்கல்வி இயக்குனர் (பொ),
பாரதியார் பல்கலை, கோவை.