/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென் திருப்பதி கோவில் தேரோட்டம்
/
தென் திருப்பதி கோவில் தேரோட்டம்
ADDED : அக் 02, 2025 12:21 AM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையத்தில் உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில், வருடாந்திர பிரம்மோற்சவ நிகழ்ச்சி, 24ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து, ஸ்ரீ மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் தினந்தோறும் நடைபெற்றன. மேலும் ஸ்ரீ மலையப்ப சுவாமி அனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம் என தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கோவில் முன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். தொடர்ந்து வேத விற்பன்னர்கள், வேத மந்திரங்கள் முழங்க மேளதாளத்துடன், பக்தர்களால் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷங்கள் எழுப்ப திருத்தேர் கோவிலின் நான்கு மாட வீதிகளின் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. இதற்கான ஏற்பாட்டை, அன்னுார் கோவிந்தசாமி குடும்பத்தார் செய்திருந்தனர்.-