/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்மேற்கு பருவமழை தீவிரம்; நீர்நிலைகளில் குளிக்க தடை
/
தென்மேற்கு பருவமழை தீவிரம்; நீர்நிலைகளில் குளிக்க தடை
தென்மேற்கு பருவமழை தீவிரம்; நீர்நிலைகளில் குளிக்க தடை
தென்மேற்கு பருவமழை தீவிரம்; நீர்நிலைகளில் குளிக்க தடை
ADDED : மே 19, 2025 11:27 PM

வால்பாறை; தென்மேற்கு பருவமழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்த நிலையில், சுற்றுலா பயணியர் அருவி, ஆற்றில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
வால்பாறையில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது. மேலும், கடந்த இரு வாரங்களாக கோடை மழை தொடர்ந்து பெய்தது. இதனால், பி.ஏ.பி., திட்டத்தின் உயிர்நாடியாக விளங்கும் சோலையாறு அணை, மேல்நீராறு, கீழ்நீராறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கோடை மழை இரவில் மட்டும் பெய்து வந்தது. தற்போது, பகல் நேரத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்கியுள்ளது. நேற்று காலை, 8:00 மணி வரை சோலையாறு - 16 மி.மீ., வால்பாறை - 31 மி.மீ., மேல்நீராறு -- 42 மி.மீ., கீழ்நீராறு -- 12 மி.மீ., மழை பெய்தது.
இதனால், நீர்வீழ்ச்சிகளில் வழக்கத்தை விட நீர்வரத்து அதிகமாக காணப்படுவதால், சுற்றுலா பயணியர் அந்தப்பகுதியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
வனத்துறையினர் கூறியதாவது: கோடை விடுமுறையில் வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகின்றனர். இந்நிலையில், சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, சோலையாறு பிர்லா நீர்வழிப்பாதை, சோலையாறுஅணை கரையோரப்பகுதிகளில், சுற்றுலா பயணியர் குளிக்கின்றனர்.
பேரிடர் காரணமாக, மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் சுற்றுலா பயணியர் ஆறு, அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு, பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகத்தால் எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினர்.