/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பு மையம் கல்வித்துறை நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
/
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பு மையம் கல்வித்துறை நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பு மையம் கல்வித்துறை நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பு மையம் கல்வித்துறை நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
ADDED : ஏப் 01, 2025 10:28 PM
உடுமலை, ;உடுமலையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், மாற்றுத்திறன் கொண்ட 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு மையம் அமைக்கும் திட்டத்தை, அரசு மீண்டும் செயல்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி செல்லும் வயதில், செல்ல முடியாமல் உள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை பராமரிக்க, பகல் நேர பாதுகாப்பு மையங்கள் செயல்படுகின்றன. திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 13 வட்டாரங்களிலும் மையங்கள் செயல்படுகின்றன.
இதில், 6 முதல் 14 வயது வரை உள்ள மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் மட்டுமே பராமரிக்கப்படுகின்றனர். இவர்களுக்கான, உடல்நல பராமரிப்பு, மனநல மேம்பாட்டுக்கான பயிற்சிகள் வழங்க, சிறப்பு ஆசிரியர்களும் உள்ளனர்.
உடுமலையில் போடிபட்டி, குடிமங்கலத்தில் சோமவாரப்பட்டி ஊராட்சியிலும் செயல்படுகிறது. இருப்பினும் இங்கு, 6 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனுடையவர்கள் மட்டுமே பராமரிக்கப்படுகின்றனர்.
அதற்கும் குறைவான வயதுடைய மாற்றுத்திறன் குழந்தைகளுக்கென சிறப்பு மையம் இல்லை. திருப்பூர் மாவட்டத்தில், பல்லடத்தில், 1 முதல் 5 வயது வரை உள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு மையம் உள்ளது.
மற்ற வட்டாரங்களில் இல்லை. பொருளாதாரத்தில், பின்தங்கிய குடும்பத்தில், மாற்றுத்திறன்குழந்தைகளுக்கு முறையான பயிற்சி வழங்க, மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலையில்தான் பலரும் உள்ளனர்.
இதனால், பள்ளி செல்லும் வயதிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மையம் போல, குழந்தைகளுக்கான மையம் அனைத்து வட்டாரங்களிலும் அமைக்க வேண்டுமென, தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் உடுமலையில், 1 முதல் 5 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான 'தொடக்க நிலை பயிற்சி மையம்', அமைப்பதற்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் முதற்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது.
உடுமலை சுற்றுப்பகுதியில், இந்த வயதுவரம்பில் உள்ள மாற்றுத்திறன் குழந்தைகள், மற்றும் அவர்களுக்கு தேவையான பயிற்சி பொருட்கள் வழங்குவது குறித்தும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் சார்பில் பட்டியல் தயார் செய்யப்பட்டது. ஆனால் பட்டியலோடு மட்டுமே இந்த சிறப்பு திட்டம் முடங்கிவிட்டது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட அலுவலர்கள் கூறுகையில், 'இந்த திட்டம் தொடர்பாக எந்தவிதமான அறிவிப்பும் வரவில்லை. திருப்பூர் மாவட்டத்தில் பல்லடத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மையம் செயல்படுகிறது. மற்ற வட்டாரங்களில் செயல்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் தற்போது மேற்கொள்ளப்படவில்லை' என்றனர்.