/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அம்மன் கோவில்களில் தை அமாவாசை சிறப்பு பூஜை
/
அம்மன் கோவில்களில் தை அமாவாசை சிறப்பு பூஜை
ADDED : ஜன 29, 2025 10:34 PM

மேட்டுப்பாளையம்; தை அமாவாசை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை, விசேஷம் மற்றும் அமாவாசை நாட்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்களும் வந்து செல்கின்றனர்.
நேற்று தை அமாவாசை முன்னிட்டு கோவில் நடை, காலை,5:00 மணிக்கு திறந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை செய்யப்பட்டது.
பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர். பின்பு கொடிமரம் அருகேயுள்ள மேடையில் தீபம் ஏற்றி, சுவாமியையும், கோவிலுக்கு வெளியே உள்ள பக்காசூரன் சுவாமியையும் வழிபட்டனர். மேட்டுப்பாளையம் அடுத்த ஊமப்பாளையத்தில் குண்டத்து காளியா தேவி கோவில் உள்ளது. இக்கோவிலில் தை அமாவாசை முன்னிட்டு, காலை, 6:00 மணிக்கு கோவில் நடை திறந்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மதியம், 12:00 மணிக்கு பவானி ஆற்றின் கரையோரம் உள்ள ராஜகணபதி, மாதேஸ்வரன், சிவலிங்கம், கங்காதேவி, முருகன், கால பைரவர், விஷ்ணு, துர்க்கை ஆகிய சுவாமி சிலைகளுக்கு, அபிஷேகம், அலங்கார பூஜை செய்யப்பட்டது.
பின்பு குண்டத்து காளியா தேவி அம்மனுக்கு, 16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து அலங்கார பூஜை நடந்தது. கோவில் எதிரே உள்ள விநாயகர், காளிதேவி, நவகிரக சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பூஜைகளை தலைமை பூசாரி பழனிசாமி, அருள் வாக்கு பூசாரி காளியம்மாள் ஆகியோர் செய்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேட்டுப்பாளையம் நகரில் அம்மன் கோவில்களில் தை அமாவாசை சிறப்பு பூஜைகள் நடந்தன.
அன்னுார்
அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள அருந்தவ செல்வி அம்மன் சன்னதியில், தை அமாவாசையை முன்னிட்டு, அம்மனுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
அன்னுார் மாரியம்மன் கோவிலில், அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள் பாலித்தார். அன்னுார் அங்காளம்மன் கோவிலில், அம்மன் கோவில் உட்பிரகாரத்தில் வாத்தியங்கள் இசைக்க உலா வந்து அருள் பாலித்தார். குலதெய்வத்தார் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
பிள்ளையப்பம் பாளையம் செல்வநாயகி அம்மன் கோவில், எல்லப்பாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவில், கோவில் பாளையம் கவைய காளி அம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் தை அமாவாசை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சூலூர்
தை அமாவாசையை ஒட்டி, சூலூர் சிவன் கோவில், பெருமாள் கோவில், விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில், கண்ணம்பாளையம், கலங்கல், அப்பநாயக்கன்பட்டி கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன.