/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை கோவையில் கிறிஸ்துமஸ் கோலாகலம்
/
தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை கோவையில் கிறிஸ்துமஸ் கோலாகலம்
தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை கோவையில் கிறிஸ்துமஸ் கோலாகலம்
தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை கோவையில் கிறிஸ்துமஸ் கோலாகலம்
ADDED : டிச 26, 2025 05:09 AM

கோவை: கோவையிலுள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவர்கள் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
கிறிஸ்தவர்கள் வீடுகளில் ஸ்டார்களை தொங்க விட்டு, அழகிய குடில்களை அமைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரித்தும் கிறிஸ்து பிறப்பை வரவேற்றனர். தேவாலயங்களும் விளக்கு களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பெரிய கடைவீதியிலுள்ள புனித மிக்கேல் அதி தூதர் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடந்தது. நேற்று அதிகாலை சிறப்பு திருப்பலி பூசை நடந்தது. புத்தாடை அணிந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
கோவை மாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸ் தலைமையில் நடந்த சிறப்பு திருப்பலியை அடுத்து, குழந்தை இயேசு கிறிஸ்து பிறப்பை அறிவித்து வழிபாடுகளை தொடர்ந்தார். மறை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தானிஸ், ஆலய பங்கு தந்தை ஸ்டீபன் பங்கேற்றனர். அனைவரும் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்தனர். இன்னிசை பாடல்களை பாடி மகிழ்ந்தனர். பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாடினர்.
புலியகுளம் புனித அந்தோணியர் தேவலாயம், நஞ்சப்பா சாலையிலுள்ள கிறிஸ்து அரசர் தேவாலயம், கோவைப்புதூர் குழந்தை இயேசு தேவாலயம், ராமநாதபுரம் ஹோலி டிரினிட்டி தேவாலயம், அரசு மருத்துவமனை எதிரிலுள்ள கிறிஸ்துநாதர் தேவாலயம், சவுரிபாளையம் இம்மானுவேல் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இம்மானுவேல் சர்ச், காந்திபுரம் பாத்திமா சர்ச், காந்திபுரம் நஞ்சப்பா சாலையிலுள்ள கிறிஸ்து அரசர் சர்ச்களில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
போத்தனூர் புனித ஜோசப் சர்ச்சில் பங்குத்தந்தை ஜோஸப் சுதாகர், புனித கார்மெல் அன்னை சர்ச்சில் பங்கு தந்தை ரசல்ராஜ், தூய க்ளோட்டில்டா சர்ச்சில் ஜான்சன், தமிழ் சுவிசேஷ லுத்தரன் சர்ச்சில் பங்குதந்தை ஆனந்த் முத்துகுமார் ஆகியோர் சிறப்பு ஆராதனை நடத்தினர்.
வெள்ளலூர் சாலையிலுள்ள யூனியன் சர்ச்சில் அதிகாலை, 4:30 மணிக்கு முதல் ஆராதனை நடந்தது. ஆயர் கெர்சோம் ஜேக்கப், இயேசு கிறிஸ்து பிறப்பு குறித்த நிகழ்வை நினைவு கூர்ந்தார். திருவிருந்து வழங்கப்பட்டது. இரண்டாவது ஆராதனையில் ஞானஸ்தானம், திருவிருந்து வழங்கப்பட்டது.
வானொலி நகர் இயேசு ரட்சகர் சர்ச்சில் ஆயர் பாபு ஜோஸ்வா, செயின்ட் மார்க் சர்ச்சில் ஆயர் ஜான் தினகரன், மெதடிஸ்ட் சர்ச்சில் ஆயர் ஆரோக்கியநாதன், சுந்தராபுரம் கிறிஸ்துநாதர் சர்ச்சில் ஆயர் ஜெபுலின், மதுக்கரை கிறிஸ்துநாதர் சர்ச்சில் ஆயர் வசந்த் நற்செய்தி வழங்கினர்.

