/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வைரஸ் காய்ச்சல் பரவல்; குடிநீரை காய்ச்சி குடிங்க
/
வைரஸ் காய்ச்சல் பரவல்; குடிநீரை காய்ச்சி குடிங்க
ADDED : நவ 08, 2024 11:32 PM
வால்பாறை; வால்பாறையில், வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகமாக காணப்படுவதால், பொதுமக்கள் குடிநீரை காய்ச்சிய பின் குடிக்க வேண்டும் என, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் பரவல் அதிகமாகி வருகிறது. பருவ மழைக்கு பின், காய்ச்சல் பரவல் அதிகமாக காணப்படுகிறது.
வால்பாறை மலைப்பகுதியில், சீதோஷ்ண நிலை மாற்றத்தால் அதிகாலை, மாலை நேரங்களில் கடும்பனிப்பொழிவும், இரவு நேரத்தில் கடுங்குளிரும் நிலவுகிறது.
இதனால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டைவலி உள்ளிட்ட பிரச்னைகளால், பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வால்பாறையில், வைரஸ் காய்ச்சல் பரவலாக, நாள் தோறும் நுாற்றுக்கணக்கான நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து, வால்பாறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் நித்யா கூறியதாவது:
வால்பாறையில், தற்போது வைரஸ் காய்ச்சல் பரவலாக காணப்படுகிறது. காய்ச்சல் அறிகுறி இருந்தால், அவர்களாக சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல், மருத்துவமனைக்குச்செல்ல வேண்டும்.
இதன் பரவலை கட்டுப்படுத்த, மருத்துவமனையில் போதிய அளவு மருந்து, மாத்திரைகள் உள்ளன. வைரஸ் காய்ச்சலால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களை, மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுவர்.
அங்கு பரிசோதனை செய்த பின் தான், டெங்கு காய்ச்சலா என்பது உறுதியாக தெரியவரும். வைரஸ் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த, அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். குடிநீரை நன்றாக காய்ச்சிய பின் பருக வேண்டும்.
இவ்வாறு, டாக்டர் தெரிவித்தார்.
பொதுமக்களும், டாக்டரின் அறிவுரைகளை தவறாது பின்பற்றி, காய்ச்சலிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும்.