/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லாறு சோதனை சாவடியில் அதிநவீன ஏ.ஐ., கேமராக்கள்
/
கல்லாறு சோதனை சாவடியில் அதிநவீன ஏ.ஐ., கேமராக்கள்
ADDED : நவ 21, 2024 11:17 PM

மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லாறு பகுதியில், புதிதாக அதிநவீன ஏ.ஐ., கேமராக்களுடன் போலீசாரின் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வழியாக தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சுற்றுலா தலமான நீலகிரிக்கு சென்று திரும்புகின்றன. விடுமுறை காலங்களில் ஒரே நேரத்தில் அதிக வாகனங்கள் வரும் போதும், மழை காலங்களிலும் சோதனை சாவடி போலீசார் வாகன தணிக்கைக்கு பெரும் சிரமம் அடைந்தனர். இதனை கருத்தில் கொண்டு புதிதாக சோதனைச்சாவடி அமைக்க நீலகிரி மாவட்ட போலீசார் முடிவு செய்தனர்.
இதன்படி மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில் குமார் உத்தரவின் பேரில், நீலகிரி மலையடிவாரத்தில் உள்ள கல்லாறு அருகே புதிதாக இரும்பு கண்டெய்னர் அறை அமைக்கப்பட்டு, அதில் ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் 9 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. இந்த சோதனைச் சாவடியை நீலகிரி மாவட்ட எஸ்.பி., நிஷா அண்மையில் திறந்து வைத்தார்.
இதுகுறித்து நீலகிரி போலீசார் கூறியதாவது:
தற்போது இச்சோதனைச் சாவடியில் அதிநவீன ஏ.ஐ., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேமராக்களின் வாயிலாக அங்கேயே உள்ள கட்டுப்பாட்டு அறையில் அனைத்தையும் கண்காணிக்க முடியும். ஏ.ஐ., கேமராக்கள் துல்லியமாக நாள், நேரத்துடன் வாகன விவரங்களை சேகரிக்கின்றன. லாரி, பஸ், கார் போன்ற வாகனங்களின் பதிவு எண், வந்த நேரம் போன்றவற்றை தானியங்கி முறையில் தகவல்கள் பதிவாகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் வாகனத்தின் பெயர் அல்லது எண் போன்ற விவரங்களை கணினியில் போட்டால், அது எப்போது வந்தது, எந்த நேரம் வந்தது ஒரு மாதத்தில் எத்தனை தடவை வந்தது போன்ற விவரங்களை நொடி பொழுதில் அறிந்து கொள்ளலாம். குற்ற செயலில் யாராவது ஈடுபட முயன்றால் அவர்களை கண்காணிப்பு கேமராவினால் விரைந்து கண்டுபிடித்து விடலாம். இவ்வாறு போலீசார் கூறினர்.