ADDED : ஆக 26, 2026 06:34 PM
சுங்கம்: திருச்சி ரோடு சுங்கம் ரவுண்டானாவில் தியாகி என்.ஜி.ஆர். (என்.ஜி.ராமசாமி) சிலை இருந்தது. மேம்பாலம் கட்டுமான பணிக்கு இடையூறாக இருந்ததால், தற்காலிகமாக அச்சிலையை அகற்றவும், வேலை முடிந்ததும் வைத்துக் கொள்ளவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை கூறியது. அதையேற்று அகற்றப்பட்டது. 2022ல் மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்தது. மீண்டும் சிலை நிறுவ இடம் கேட்டபோது, நெடுஞ்சாலைத்துறை தடையின்மை சான்று வழங்கி விட்டு, கலெக்டரிடம் அனுமதி பெறச் சொன்னது.
கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தினர், மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர். மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற அறிவுறுத்தப்பட்டது. பல கட்ட போராட்டத்துக்கு பின், 2023ல் சிலை நிறுவ அனுமதி வழங்க பரிசீலிக்கலாம் என தீர்மானம் நிறைவேற்றியது. தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றதும், சட்டசபை தேர்தலுக்கு முன் அனுமதி தரப்பட்டது. தேர்தலுக்கு பின் சிலை நிறுவிக் கொள்ள தெரிவிக்கப்பட்டது. தற்போது பீடம் அமைக்கப்படுகிறது.
தொழிற்சங்க நிர்வாகி ராஜாமணி கூறுகையில், ‘‘தியாகி என்.ஜி.ஆர்., சிலையை 30 ஆண்டுக்கு முன் நிறுவினோம். மேம்பாலம் கட்டுவதற்காக தற்காலிகமாக அகற்றினோம். மீண்டும் நிறுவ தலைமை செயலகம் வரை சென்று அனுமதி பெற்றோம். பீடம் அமைத்து சிலை நிறுவும் பணி செப்டம்பருக்குள் முடியும்; அக்டோபரில் திறப்பு விழா நடத்தப்படும்,’’ என்றார்.
