/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மெல்லக் கற்கும் மாணவர்களின் கற்றல் திறனை கண்காணிக்க நடவடிக்கை
/
மெல்லக் கற்கும் மாணவர்களின் கற்றல் திறனை கண்காணிக்க நடவடிக்கை
மெல்லக் கற்கும் மாணவர்களின் கற்றல் திறனை கண்காணிக்க நடவடிக்கை
மெல்லக் கற்கும் மாணவர்களின் கற்றல் திறனை கண்காணிக்க நடவடிக்கை
ADDED : அக் 23, 2025 11:44 PM
கோவை: மெல்லக் கற்கும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், மாவட்ட கல்வித்துறை சார்பில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் 1,210 அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் மெல்லக் கற்கும் மாணவர்கள் தனியாக அடையாளம் காணப்பட்டு, செப்டம்பர் மாதம் வரை அவர்களுக்காக சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன.
'திறன்' திட்டத்தின் கீழ், இம்மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வில் தனிப்பட்ட வினாத்தாள்கள் வழங்கப்பட்டு, அவர்களின் கற்றல் திறன் மதிப்பீடு செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் மாணவர்கள் மெல்லக் கற்கும் மாணவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
சிறப்பு வகுப்புகள் மற்றும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பயிற்சிகளின் விளைவாக, பெரும்பாலான மாணவர்கள் தற்போது கற்றலில் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளனர் என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், 6, 7 மற்றும் 9ம் வகுப்புகளில் உள்ள மெல்லக் கற்கும் மாணவர்களின் கற்றல் நிலையைத் தொடர்ந்து கண்காணிக்கவும், அவர்களின் 'கிரிட்டிகல் லேர்னிங் அவுட்கம்' (முக்கிய கற்றல் விளைவுகள்) திறனை மேலும் அதிகரிக்கவும் மாவட்ட கல்வி அதிகாரிகள் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
15 ஒன்றியங்களில் இந்த திட்டத்திற்காக, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அலுவலர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் உள்ள 197 மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 230 நடுநிலைப்பள்ளிகள் இந்த கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. 15 ஒன்றியங்களில், ஒவ்வொரு அதிகாரிக்கும் ஒரு ஒன்றியத்திற்குஒரு பள்ளி வீதம், மொத்தம் 15 பள்ளிகளை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அதிகாரிகள் பள்ளி வாரியாக மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்தை நேரடியாகக் கண்காணிக்க உள்ளனர்.

