/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாகரிக உலகில் பழங்குடியின மக்கள் கற்கால வாழ்க்கை! மண்ணெண்ணைய் விளக்கில் பயிலும் குழந்தைகள்
/
நாகரிக உலகில் பழங்குடியின மக்கள் கற்கால வாழ்க்கை! மண்ணெண்ணைய் விளக்கில் பயிலும் குழந்தைகள்
நாகரிக உலகில் பழங்குடியின மக்கள் கற்கால வாழ்க்கை! மண்ணெண்ணைய் விளக்கில் பயிலும் குழந்தைகள்
நாகரிக உலகில் பழங்குடியின மக்கள் கற்கால வாழ்க்கை! மண்ணெண்ணைய் விளக்கில் பயிலும் குழந்தைகள்
ADDED : அக் 11, 2024 10:25 PM

பொள்ளாச்சி : 'எங்க புள்ளைகளும் பெரிய ஆபீசரா வரணும்னு ஆசை இருக்கு, ஆனா, அதெல்லாம் கனவா போயிடுமோனு பயமாயிருக்கு,' என்ற பழங்குடியின மக்களின் மனக்குமுறல் அரசின் செவிகளுக்கு சென்றடையவில்லை.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உலாந்தி வனச்சரகத்தில், எருமைப்பாறை, கூமாட்டி, கோழிகமுத்தி உள்ளிட்ட பழங்குடியின குடியிருப்புகள் உள்ளன. அதில், எருமைப்பாறையில் - 37, கோழிகமுத்தியில் - 94, கூமாட்டியில் - 40 பழங்குடியின குடும்பங்கள் வசிக்கின்றனர்.
டாப்சிலிப் அருகே உள்ள எருமைப்பாறை பழங்குடியின குடியிருப்பில், மின்இணைப்பு வழங்க வேண்டும் என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல கட்ட போராட்டங்களை அடுத்து, மின்வாரியம் சார்பில், டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.
மின் இணைப்பு வழங்க 'ஆன்லைன்' வாயிலாக குடும்பத்துக்கு, 3,500 ரூபாய் வீதம் செலுத்தி, மூன்றாண்டுகள் ஆகியும் மின் இணைப்பு வழங்கவில்லை.
தயக்கம் ஏனோ?
டாப்சிலிப்பில் அரசு தங்கும் விடுதிகள், சுற்றுலா பயணியர் தங்கிச் செல்வதற்கான அறைகளில் மின் இணைப்பு வசதி உள்ளது. அதன் அருகே, 200 மீட்டர் துாரத்தில் உள்ள எருமைப்பாறையில் மின் இணைப்பு வழங்க வனத்துறை அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்.
எருமைப்பாறை பகுதிக்கு மின் இணைப்பு கொடுத்தால், கூமாட்டி, கோழிகமுத்தி குடியிருப்புக்கும் வழங்க வேண்டும் என்பதால், வனத்துறை தயக்கம் காட்டுகிறதா என தெரியவில்லை.
போராட்டமே வாழ்க்கை
நாகரிக உலகில் இன்னும் கற்கால வாழ்க்கையை பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். உரிமையை பெற அந்த மக்கள் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு, போராட்டமே வாழ்க்கையாக மாறியுள்ளது.
டாப்சிலிப், பரம்பிக்குளம் பகுதியில் மின் இணைப்பு இருந்தும், அதன் அருகே உள்ள பழங்குடியின மக்கள் குடியிருப்புக்கு மின் இணைப்பு வழங்க அரசு அனுமதி மறுப்பது புரியாத புதிராக உள்ளது.
மின் இணைப்பு வழங்கப்படாத நிலையில், பழங்குடியின மக்களுக்கு இலவச, 'டிவி', மிக்ஸி, கிரைண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை பயன்படுத்த மின்சாரம் வேண்டும் என்ற அடிப்படை உணர்வு கூட அதிகாரிகளுக்கு இல்லை.
சுற்றுலா மேம்பாட்டுக்காக மின் வசதி வழங்குவது போல, வாழ்வாதாரத்துக்காக மின் வசதி கேட்டும், வழங்க மறுப்பதற்கான காரணத்தை விளக்க வேண்டும். இருள் நீங்கி வெளிச்சம் கொடுக்க அரசு முன்வர வேண்டும்.
பழங்குடியின மக்களின் குழந்தைகள் படிக்க முடியாத சூழல் உள்ளது. இங்குள்ள குழந்தைகள், இரவில் பயில மண்ணெண்ணைய் விளக்குகளே பயன்படுத்தப்படுகிறது. இருளில் படிக்க திணறும் குழந்தைகளின் மனதில், படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்ற ஆசையே மறந்து போய்விடும் என்ற நிலை உருவாகியுள்ளது.
அனுமதிக்கு காத்திருப்பு
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'எருமைப்பாறை பகுதியில் மின் இணைப்பு வழங்கும் வகையில், டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. வனத்துறை அனுமதி வழங்கினால், இணைப்பு வழங்க தயாராக உள்ளோம்,' என்றனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஆனைமலை புலிகள் காப்பகமாக மாற்றப்பட்ட பின், கடும் கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இது குறித்து மத்திய அரசின் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் மின் இணைப்பு வழங்குவதில் சிக்கல் உள்ளதாக மனு நிராகரிக்கப்பட்டது.
அதனால், மின் இணைப்புகள் பூமிக்கு அடியில் கேபிள்களை பதித்து பாதுகாப்பான முறையில் வழங்க, மீண்டும் திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி கிடைத்தால் எருமைப்பாறைக்கு மின் இணைப்பு வழங்கப்படும்,' என்றனர்.