ADDED : மார் 29, 2026 03:52 AM

வ றுமையும், நோயும் தொடர்ந்து கோர முகம் காட்டிய போது, அசராமல் மன உறுதியால் கேன்சரை வென்றுள்ளார் சரவணம்பட்டி யுவஸ்ரீ.
இருபது வயதுக்கான வேகம் அவர் பேச்சில் ஓடியது...
ஏழை குடும்பங்களுக்கு வாடிக்கையான சோக கதை தான். அப்பா குடித்தே இறந்தார். அம்மா வீட்டு வேலைகள் செய்து வைராக்கியத்துடன் எங்களை வளர்த்தார். அக்கா 2 டிகிரி வாங்கினார். நான் பிளஸ் 2வில், 600க்கு 445. சீக்கிரம் படித்து வேலைக்கு போய், அம்மாவுக்கு ரெஸ்ட் கொடுக்கணும்னு நினைச்சேன். ஆனா, விதி வேற மாதிரி கணக்கு போட்டிருந்துச்சு.
அக்கா கல்யாணத்துல கேக் வெட்டி கொண்டாடினோம். ஒரு பீஸ் எடுத்து சாப்பிட்டதும் மயங்கிட்டேன். கண் முழிச்சா, சுகர் 750 க்கு எகிறிட்டதா டாக்டர் சொன்னாங்க. மாத்திரை வாங்கிட்டு வீட்டுக்கு வந்துட்டோம். எப்போவும் சோர்வா இருக்கும். அடிக்கடி உடம்பு முடியாம, ஜி.எச்.க்கு வருவோம். அம்மா வேலைக்கு போன இடத்துல சொல்லி தான், இதயங்கள் அறக்கட்டளை பத்தி கே ள்விப்பட்டோம். டாக்டர் சுவாமிநாதன் இருட்டான என் வாழ்க்கைல வெளிச்சம் கொடுத்தாரு.
சுகர் கன்ட்ரோல் ஆனதும் திடீர்னு, கால் முட்டி வலிக்க ஆரம்பிச்சுது. எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்தப்ப, கேன்சர் கட்டின்னு சொல்லிட்டாங்க. கண்ணீரோடு திரும்பவும் டாக்டர் முன்னாடி நின்னேன். நிறைய நல்ல உள்ளங்கள் தயவால, கங்கா மருத்துவமனையில, இடது கால் எடுத்து செயற்கை கால் பொருத்தினாங்க. அந்த கால் மட்டுமே நாலரை லட்சம் ரூபாய். வெளிநாட்டுல இருந்து, முகம் தெரியாத ஒருத்தர் டொனேஷன் கொடுத்தார்.
கேன்சரை விட கொடுமையானது, அதோட பின்விளைவு. கீமோதெரபி முடிச்சதும், நடு மண்டையில இருந்து கொத்தா முடி வந்துச்சு. முதல் தடவையா அழுதேன். சாமிக்கு முடியை காணிக்கையா கொடுத்துட்டு, இனி அழவே கூடாதுன்னு முடிவெடுத்தேன். செயற்கை கால் பொருத்தின அடுத்தநாள் நடந்துட்டேன். டாக்டரே ஆச்சர்யப்பட்டாங்க.
அடுத்து நாலு கீமோதெரபி முடிச்சதும், இனி சொந்த கால்ல நிக்கணும்னு முடிவெடுத்து, பியூட்டிஷியன் படிப்பு முடிச்சேன். காஸ்ட்யூம் டிசைனிங் படிக்க ஆசை. என்னை பாக்குற நிறைய பேர், எப்படி உன்னால இவ்ளோ செய்ய முடியுதுன்னு கேப்பாங்க. நாய் நம்மளை துரத்துனா உயிருக்கு பயந்து ஓடறதில்லயா... அப்படித்தான் இதுவும்.
