/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மணல் கடத்தலை தடுத்து நிறுத்துங்க: கலெக்டரிடம் முறையீடு
/
மணல் கடத்தலை தடுத்து நிறுத்துங்க: கலெக்டரிடம் முறையீடு
மணல் கடத்தலை தடுத்து நிறுத்துங்க: கலெக்டரிடம் முறையீடு
மணல் கடத்தலை தடுத்து நிறுத்துங்க: கலெக்டரிடம் முறையீடு
ADDED : மார் 05, 2024 01:10 AM
கோவை;பொதுமக்களிடம் குறைகேட்கும் கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கிராந்திகுமார், டி.ஆர்.ஓ., ஷர்மிளா ஆகியோர், மனுக்கள் பெற்றனர். மொத்தம், 507 மனுக்கள் பெறப்பட்டன.
தடுப்புகளை எடுங்க
வேலாண்டிபாளையம், வெங்கிட்டாபுரம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கொடுத்த மனு:
கோவை நகர பகுதியில், தடாகம் ரோடு நான்கு வழிச்சாலையாக அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ஜி.சி.டி., பிரதான நுழைவாயில் முன்பிருந்து கோவில்மேடு பிரிவு வரை ரோட்டின் மையத்தில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. வெங்கிட்டாபுரம், என்.எஸ்.ஆர்., ரோடு சந்திப்பில், புதிதாக போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.
சாலையின் நடுவே தடுப்பு இருப்பதால், வெங்கிட்டாபுரத்தில் இருந்து லாலி ரோடு செல்பவர்கள், சிக்னல் திரும்ப முடியாமல் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. என்.எஸ்.ஆர்., ரோட்டில் இருந்து, தடாகம் சாலையில் தெற்காகவும், வடக்காகவும் பஸ்கள் திரும்புவதற்கு சிரமம் ஏற்படுகிறது.
எனவே, தடாகம் சாலையை ஜி.சி.டி., முதல் இடையர்பாளையம் வரை, 80 அடி அகலமாக மாற்ற, ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும். வெங்கிட்டாபுரத்தில் குடியிருப்புகளுக்கு செல்ல, தடையாக உள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும்.இவ்வாறு, கூறியுள்ளனர்.
மயான பராமரிப்பு
பா.ஜ., அமைப்பு சாரா மக்கள் நலப்பிரிவு தலைவர் தங்கவேல் கொடுத்த மனுவில், 'மாநகராட்சி, 19வது வார்டு மணியகாரன்பாளையத்தில் உள்ள மயானம் பராமரிப்பின்றி இருக்கிறது. சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிக் கொண்டிருக்கிறது. பராமரிப்பு பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும்' என கூறியுள்ளார்.
மணல் கடத்தல்
தமிழ்நாடு கனிமம் மற்றும் இயற்கை வளம் சார்ந்த அமைப்பினர் கொடுத்த மனுவில், 'தொண்டாமுத்துார் வட்டாரத்தில், மலையை ஒட்டியுள்ள நிலங்களில், அனுமதியின்றி கிராவல் மண் மற்றும் செம்மண் எடுக்கப்படுகிறது.
தினமும், 1,000 யூனிட் வரை வெட்டியெடுத்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி, கிராவல் மண் யூனிட்டுக்கு ரூ.4,000, செம்மண் ஒரு யூனிட்டுக்கு ரூ.8,000க்கு கட்டுமான பணி மற்றும் செங்கல் சூளைகளுக்கு விற்கின்றனர். மண் கொள்ளையை தடுத்து, இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டும். வன விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும். மணல் கொள்ளையை தடுக்க, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளனர்.

