/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட எல்லையில் தீவிர வாகன தணிக்கை
/
மாவட்ட எல்லையில் தீவிர வாகன தணிக்கை
ADDED : அக் 21, 2024 04:01 AM

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் கல்லார் இ-பாஸ் சோதனை சாவடியில் ஆயுதம் கொண்டு செல்லுதல், போதை பொருள் கடத்தல், சட்டவிரோதமாக வெளிநாட்டினர் யாராவது ஊடுருவியுள்ளனரா உள்ளிட்டவைகள் தொடர்பாக தீவிர வாகன தணிக்கை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல கடந்த மே 7ம் தேதி முதல் இ- பாஸ் முறை அமலில் உள்ளது. இதையடுத்து பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்குள் செல்லும் 13 வழித்தடங்களிலும் இ-பாஸ் சோதனை நடைபெற்று வருகிறது.
கோவையில் இருந்து குன்னுார் வழியாக ஊட்டி செல்லக்கூடிய சாலையில், மேட்டுப்பாளையம் அடுத்த கல்லார் துாரிப்பாலம் அருகே கோவை - நீலகிரி மாவட்ட எல்லையில் இ- பாஸ் சோதனை சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இச்சோதனை சாவடியில் இ-பாஸ் பெற்று இருந்தால் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இ- பாஸ் பெறாத வாகனங்களுக்கு, வருவாய் துறை அதிகாரிகள் இ-பாஸ் எடுத்து தருகின்றனர்.
இச்சோதனை சாவடியில் குன்னுார் போலீசார் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு போலீசார் நேற்று, இங்கு தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, வாகனங்களில் போதை பொருள் உள்ளதா, ஆயுதங்கள் ஏதேனும் உள்ளதா, வாகனங்களை யாராவது திருடி வந்துள்ளனரா, சந்தேகம்படும்படியான நபர்கள் உள்ளனரா, சட்டவிரோதமாக வெளிநாட்டினர் யாரவது ஊடுருவியுள்ளனரா, தேடப்படும் பழைய குற்றவாளிகள் உள்ளனரா என தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம் போலீசார் கூறுகையில், ''தமிழகம் முழுவதும் குற்ற தடுப்பு குறித்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீசார் பொது மக்களை நேரில் சந்தித்து, எவ்வாறு குற்றங்கள் ஏற்படுகிறது, அதனை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன் படி மேட்டுப்பாளையத்திலும் விழிப்புணர்வு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக தீவிர வாகன தணிக்கையும் நடைபெறுகிறது,'' என்றனர்.-------

