/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளலுாரில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க கடும் எதிர்ப்பு; விழிப்புணர்வு ஏற்படுத்த தீர்ப்பாயம் உத்தரவு
/
வெள்ளலுாரில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க கடும் எதிர்ப்பு; விழிப்புணர்வு ஏற்படுத்த தீர்ப்பாயம் உத்தரவு
வெள்ளலுாரில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க கடும் எதிர்ப்பு; விழிப்புணர்வு ஏற்படுத்த தீர்ப்பாயம் உத்தரவு
வெள்ளலுாரில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க கடும் எதிர்ப்பு; விழிப்புணர்வு ஏற்படுத்த தீர்ப்பாயம் உத்தரவு
ADDED : ஆக 13, 2025 01:24 AM
சென்னை; கோவையில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள்நடப்பதால், இதுகுறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, மாநகராட்சிக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
'கோவை மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளலுாரில், 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. இங்கு 253 ஏக்கர் பரப்பளவுக்கு குப்பை கொட்டப்படுகிறது. தரம் பிரிக்கப்படாத குப்பைகள் கொட்டப்படுவதுடன், குப்பைகள் எரிக்கப்படுகின்றன.
இதனால் சுற்றியுள்ள பகுதிகளில் காற்று, நீர் மாசுபட்டு, சுகாதார சீர்கேடு ஏற் படுகின்றன. எனவே, இங்கு குப்பை கொட்டுவதை நிறுத்த உத்தரவிட வேண்டும்' என, கோவையை சேர்ந்த ஈஸ்வரன், மோகன் ஆகியோர், தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதை விசாரித்த தீர்ப்பாயம், 'வெள்ளலுார் குப்பை கிடங்கில் குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும். ஏற்கனவே அங்குள்ள குப்பைகள் பயோ-மைனிங் உள்ளிட்ட வழிகளில் அகற்ற வேண்டும்' என, உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
கோவை மாநகராட்சி கமிஷனர் தாக்கல் செய்த அறிக்கையில், 'கழிவுகளிலிருந்து சிமென்ட் தொழிற்சாலைகளுக்கான ஆர்.டி.எப்., எனப்படும் எரிபொருளை அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 92,431 டன் கழிவுகள் பதப்படுத்தப்பட்டு, 13,300 டன் ஆர்.டி.எப்., ஆக மாற்றப்பட்டுள்ளன' என்று கூறப்பட்டுள்ளது.
கோவை முழுதும் இருந்து கழிவுகள், வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு அனுப்புவதாகக் கூறப்படுகிறது. எனவே, அங்கு குப்பை மேலாண்மையை விரைந்து செயல்படுத்துவது சாத்தியமில்லை. 32 மைக்ரோ கம்போஸ்டிங் மையங்களில், இப்போது 26 மையங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை ஒவ்வொன்றும் தினமும் ஐந்து டன், கழிவுகளை மேலாண்மை செய்யும் திறன் கொண்டவை. ஆனாலும், அதிகமான குப்பை சேருவதால் வெள்ளலுார் குப்பை கிடங்கிற்கே கொண்டுச் செல்லப்படுகின்றன.
மைக்ரோ கம்போஸ்டிங் மையங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டங்கள் நடத்துவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்றுவதுகுறித்து பொதுமக்களுக்கு, மாநகராட்சி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இப்பிரச்னையில், நகராட்சி நிர்வாகத்துறை செயலரின் வேண்டுகோளில், அதிகாரிகள் எடுத்த முயற்சிகள் பாராட்டுக்குரியது.
இது தொடர்பான நடவடிக்கைகளை கண்காணிக்க நகராட்சி நிர்வாகத்துறை செயலர், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை வரும் நவம்பர் 3ல் நடக்கும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.