/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒற்றை இலக்கம்
/
அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒற்றை இலக்கம்
அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒற்றை இலக்கம்
அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒற்றை இலக்கம்
ADDED : நவ 21, 2025 06:55 AM

கோவை: கோவையில் செயல்படும் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில், மூன்று ஆரம்பப்பள்ளிகளில் ஒற்றை இலக்கு எண்ணில் மாணவர் சேர்க்கை உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், பள்ளிகள் மூடும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ்2 மேல்நிலை, ஒரு உயர்நிலை மற்றும் 12 ஆரம்பப்பள்ளிகள் என 15 பள்ளிகள் செயல்படுகின்றன.
இங்கு, 938 மாணவர்கள் பயில்கின்றனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, பெரியகல்லார், ஈட்டியார், சின்கோனா ஆகிய பகுதிகளில் செயல்படும் ஆரம்பப்பள்ளிகளில், தற்போது ஒற்றை இலக்க எண்ணிக்கையிலேயே மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
காரணங்கள் ஆதிதிராவிடர் நலசங்கத்தினர் கூறுகையில், 'மக்கள் நகர்ப்புறங்களை நோக்கி இடம்பெயர்வதும், குறிப்பிட்ட பகுதிகளில் மக்கள் தொகை குறைவும் ஒரு காரணம் என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டாலும், அது மட்டுமே முழுமையான காரணமல்ல; பள்ளிகளில் போதிய வகுப்பறை வசதிகள் இன்மை, நிரப்பப்படாமல் உள்ள தலைமையாசிரியர், ஆசிரியர்பணியிடங்கள்மற்றும் அதிகாரிகளின் ஆய்வில் உள்ள தொய்வு போன்ற பல்வேறு குறைபாடுகள் இருப்பதேமுக்கிய காரணம்' என்கின்றனர்.
'பெரும்பாலான ஆரம்பப்பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி மட்டுமே உள்ளது. ஆனால், தற்போதைய பெற்றோர்கள் ஆங்கில வழிக் கல்வியை விரும்புவதால், அருகில் உள்ள ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கும் பிற அரசுபள்ளிகளில் தங்கள் குழந்தைகளைசேர்க்கின்றனர். இதனாலும்,ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் சேர்க்கை குறையலாம்' என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதுவே தீர்வு சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'பெற்றோர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய, பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்.எம்.சி.,) கூட்டத்தில் முடிவெடுத்து ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளை எளிதாக தொடங்கலாம். தற்போது 1:30 என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் உள்ளதால், பல பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகவே உள்ளன.
எஸ்.எம்.சி மூலம் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டாலும், 4 மற்றும் 5ம் வகுப்புகளுக்குப் பாடம் எடுப்பதுடன் பள்ளி நிர்வாகம், சத்துணவு கண்காணிப்பு, எமிஸ் பதிவேற்றம் ஆகிய அனைத்துப் பணிகளையும் தலைமையாசிரியரே கவனிக்க வேண்டியுள்ளது. இது மாணவர்களின் கற்றலில் பின்னடைவை ஏற்படுத்துகிறது.
பள்ளியின் அடிப்படை வசதிகள் மற்றும் கற்பித்தல் திறனை மேம்படுத்தினால், அப்பகுதி மக்கள் மீண்டும் அரசு நலப்பள்ளிகளைத் தேடி மக்கள் வர வாய்ப்புள்ளது. நிர்வாகசீர்திருத்தங்களையும், மேம்படுத்தி நடவடிக்கை எடுத்தால், மூடும் அபாயத்திலிருந்து பள்ளிகளை காக்க முடியும்' என சுட்டிகாட்டுகின்றனர்.

