ADDED : செப் 24, 2026 08:30 PM
மேட்டுப்பாளையம்: ‘வைக்கோல் தீவனத்தை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, உழவர் அமைப்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் தாலுகாவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக, விவசாயிகள் கறவை மாடுகள் வளர்ப்பு மேற்கொண்டு வருகின்றனர். மாடுகளுக்கு தேவையான பசுந்தீவனத்தை, தங்கள் வயலில் பயிர் செய்து வருகின்றனர். தற்போது மழை பெய்யாததால் தீவனப் புல்லுக்கு போதிய தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருகிறது. அதனால், திருச்சி, தஞ்சையில் இருந்து வைக்கோலை விலை கொடுத்து வாங்கி கறவை மாடுகளுக்கு வழங்குகின்றனர். தற்போது வைக்கோல் கட்டின் விலை உயர்ந்துள்ளது.
காரமடையை அடுத்த முத்துக்கல்லுாரில் உள்ள குறிஞ்சி உழவர் மன்ற செயலாளர் தேவராஜ் மற்றும் உறுப்பினர்கள் கூறியதாவது:
விவசாயிகள் ஒவ்வொருவரும் இரண்டு கறவை மாடுகளுக்கும் மேல் வளர்க்கின்றனர். இந்த மாடுகளுக்கு தேவையான பசுந்தீவன பயிர்களை, தங்கள் நிலத்தில் விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம் அதிகம் கொடுத்தால், பால் அதிகம் கிடைக்கும். நான்கு மாதங்களாக மழை பெய்யாததால், கிணறுகளில் தண்ணீர் குறைந்துள்ளது. போதிய தண்ணீர் இல்லாததால், தீவனப்பயிர்கள் வாடி வருகின்றன. கறவை மாடுகளுக்கு வைக்கோல் வாங்கி, தீவனமாக வழங்கி வருகிறோம்.
நான்கு மாதங்களுக்கு முன், ஒரு வைக்கோல் கட்டின் விலை, 250 ரூபாயாக இருந்தது. அதிகமான விவசாயிகள் வாங்கி வருவதால் ஒரு கட்டின் விலை, 350 ரூபாயாக விலை உயர்த்தி உள்ளனர். புண்ணாக்கு, பருத்தித் கொட்டை, தீவனம் ஆகியவற்றின் விலையை உயர்த்தி உள்ளனர். இதனால் செலவுகள் அதிகரித்துள்ளது. அதனால் கூட்டுறவு சங்கத்திற்கு பால் ஊற்றும் விவசாயிகளுக்கு, மானிய விலையில் வைக்கோல் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
