/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மானிய விலை யூரியாவை தொழிற்சாலைக்கு பயன்படுத்த கூடாது; வேளாண்துறை எச்சரிக்கை
/
மானிய விலை யூரியாவை தொழிற்சாலைக்கு பயன்படுத்த கூடாது; வேளாண்துறை எச்சரிக்கை
மானிய விலை யூரியாவை தொழிற்சாலைக்கு பயன்படுத்த கூடாது; வேளாண்துறை எச்சரிக்கை
மானிய விலை யூரியாவை தொழிற்சாலைக்கு பயன்படுத்த கூடாது; வேளாண்துறை எச்சரிக்கை
ADDED : ஜன 02, 2025 10:30 PM
பெ.நா.பாளையம்; விவசாயிகளுக்காக மானிய விலையில் வழங்கப்படும் யூரியாவை சட்டத்துக்கு புறம்பாக தொழிற்சாலையில் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, வேளாண்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை மாவட்டத்தில் நடப்பு ராபி பருவத்திற்கான ரசாயன உரங்கள் தேவையான அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது யூரியா, 2,576 மெ.டன், டி.ஏ.பி., 873 மெ.டன், பொட்டாஷ், 2984 மெ.டன். காம்ப்ளக்ஸ், 4084 மெ. டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாய பயன்பாட்டிற்கான மானிய விலை யூரியாவை தவறாக தொழிற்சாலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் நபர்கள் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின்படி குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் முதல், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருளின் மதிப்புக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும். முறையற்ற முகவர்களிடம் தொழிற்சாலை பயன்பாட்டிற்கான உரங்களை வாங்க வேண்டாம் என, அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மானிய விலை உரம் விற்பனை செய்யும் உரிமம் பெற்ற மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள், மானிய உரங்களை, பிற மாநில, மாவட்டங்களுக்கு அனுப்புவதோ பிற மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யவோ கூடாது. விற்பனை உரிமத்தில் அனுமதி பெற்ற நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே இருப்பு வைத்து விற்பனை செய்திட வேண்டும்.
உரிமத்தில் அனுமதி பெறாமல், கலப்பு உரங்களை இருப்பு வைத்து விற்பனை செய்தல் கூடாது. உர முட்டையின் மேல் அச்சிடப்பட்டுள்ள விலைக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது. விற்பனை நிலையத்தில் உர இருப்பு மற்றும் விலை விபர பலகையினை விவசாயிகள் பார்வையில் படும்படி வைத்து தினசரி பராமரிக்கப்பட வேண்டும். உர விற்பனை முனைய கருவி வாயிலாக மட்டுமே விற்பனை செய்திட வேண்டும்.
விவசாயிகளுக்கு தேவையற்ற இடுபொருள்களை இணைத்து விற்பனை செய்யக்கூடாது. விவசாயம் அல்லாத தேவைக்கு மானிய உரங்களை விற்பனை செய்தல், உரம் கடத்தல், பதுக்கல் ஆகிய செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மீறினால் உர உரிமம் ரத்து செய்யப்படும் என, கோவை வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணவேணி தெரிவித்தார்.