ADDED : ஜூன் 23, 2026 07:31 AM
கோவை: சட்டசபை தேர்தல் காரணமாக, கோவை மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை மற்றும் 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் தொடர்பான சூயஸ் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அந்த பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன.
சூயஸ் நிறுவனம் இன்னும் 58 கி.மீ தொலைவுக்கு குழாய் பதிக்க வேண்டியுள்ளது. பொது மக்கள் மற்றும் போக்குவரத்துக்கு தொந்தரவில்லாமல் இந்த பணிகளை செய்வது தொடர்பாக மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா, மாநகர போலீஸ் துணை கமிஷனர் மகேஸ்வரன் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சூயஸ் நிறுவனத்தின் பணிகள் நிலுவையில் உள்ளது. முதல்கட்டமாக காந்திபுரம் முதல் ப்ரோஸோன் மால் வரை உள்ள சத்தி சாலையில் குழாய் பதிக்கும் பணி துவங்கவுள்ளது.
இதேபோல கீரணத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் பாதாள சாக்கடை பணி நடைபெறவுள்ளது. பொது மக்களுக்கு தொந்தரவு இல்லாமல் இரவு நேரத்தில் மட்டும் இந்த பணிகளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை மட்டுமே இந்த பணி நடைபெறும். காலை முதல் இரவு வரை போக்குவரத்துக்கு எந்த தொந்தரவும் இருக்காது என்றனர்.
