/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரி ஏய்ப்பு செய்தால் ஜப்தி நடவடிக்கை பாயும்! வரும் 30ம் தேதி வரை அவகாசத்துடன் எச்சரிக்கை
/
வரி ஏய்ப்பு செய்தால் ஜப்தி நடவடிக்கை பாயும்! வரும் 30ம் தேதி வரை அவகாசத்துடன் எச்சரிக்கை
வரி ஏய்ப்பு செய்தால் ஜப்தி நடவடிக்கை பாயும்! வரும் 30ம் தேதி வரை அவகாசத்துடன் எச்சரிக்கை
வரி ஏய்ப்பு செய்தால் ஜப்தி நடவடிக்கை பாயும்! வரும் 30ம் தேதி வரை அவகாசத்துடன் எச்சரிக்கை
ADDED : செப் 27, 2024 11:22 PM

பொள்ளாச்சி: 'பொள்ளாச்சியில் சொத்து வரி விதிக்காத கட்டடங்கள் வரும், 30ம் தேதிக்குள் வரி விதிப்புக்கு முன்வர வேண்டும். இல்லையெனில், சட்ட நடவடிக்கை பாயும்,' என நகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.
பொள்ளாச்சி நகராட்சியில், 1.26 லட்சம் பேர் வசிக்கின்றனர். சொத்து வரி, காலி மனை வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, குப்பை சேவை கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்ட வகையில் ஆண்டுக்கு 33.77 கோடி ரூபாய் வருவாய் இலக்கு உள்ளது.
இந்த வருவாயை கொண்டு தான், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவும், புதிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள், நகராட்சி ஊழியர்கள், துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் மின் கட்டணம் உள்ளிட்ட செலவினங்கள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் நகராட்சிக்கு கடந்த, இரண்டு ஆண்டுகளில் மட்டும், 28 கோடியே, 84 லட்சத்து, 42 ஆயிரம் ரூபாய் வரி நிலுவை உள்ளது. எனவே, நகராட்சிக்கு செலுத்தவேண்டிய அனைத்து வரி மற்றும் கட்டணங்களை உடனடியாக செலுத்தி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து, வரிவசூல் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில், நகராட்சி கமிஷனர் கணேசன், வருவாய்துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்து, வரி செலுத்தாத மற்றும் நிலுவை வைத்துள்ள நிறுவனங்கள் உடனடியாக வரி செலுத்த அறிவுறுத்தினார்.
நகராட்சி கமிஷனர் கூறியதாவது:
தற்போது வரை, 3.6 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. கடந்த, 10 நாட்களில் மட்டும், 2.5 கோடி ரூபாய் வசூலானது. பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் வரி செலுத்தாமல் அதிகளவு நிலுவை வைத்துள்ளன. இது குறித்து கள ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகராட்சியில் பல்வேறு பகுதிகளில், கட்டடங்களுக்கு வரி விதிப்பு செய்யாமலும், குடியிருப்பு வரி செலுத்திக் கொண்டு வணிக செயல்பாடுகள் செய்து கொண்டும், பெரிய கட்டடங்கள் இருந்த போதிலும் குறைந்த அளவே வரி செலுத்தியும் சிலர் வரி ஏய்ப்பு செய்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும், தாங்களாகவே முன்வந்து முழுமையான மற்றும் முறையான வரியை விதித்துக்கொள்ள, வரும்,30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் நகராட்சி வருவாய் பிரிவு அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து, சட்டப்படி அபராதம் விதிக்கப்படுவதுடன் வரி ஏய்ப்பு செய்த கட்டடத்தை ஜப்தி செய்யவும், வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, விரைவில் வரி செலுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
நீட்டிக்கப்படுமா?
தற்போது, வரி செலுத்த பலரும் முன்வந்துள்ள சூழலில், வரும், 30ம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 15 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கினால், வரி செலுத்தாதவர்களும் செலுத்த வாய்ப்பாக இருக்கும்.
இது குறித்து நகராட்சி நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி, இறுதி கட்ட வாய்ப்பு வழங்கலாம் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.