/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெட்டு, குத்து, சுட்டு தள்ளுவது எல்லாம் வீரம் அல்ல என்று சொல்லிக் கொடுங்கள்
/
வெட்டு, குத்து, சுட்டு தள்ளுவது எல்லாம் வீரம் அல்ல என்று சொல்லிக் கொடுங்கள்
வெட்டு, குத்து, சுட்டு தள்ளுவது எல்லாம் வீரம் அல்ல என்று சொல்லிக் கொடுங்கள்
வெட்டு, குத்து, சுட்டு தள்ளுவது எல்லாம் வீரம் அல்ல என்று சொல்லிக் கொடுங்கள்
ADDED : ஆக 16, 2025 09:27 PM

'ஆ ம்பள பையன் நீ அழக்கூடாது.... பொம்பள புள்ள நீ பொறுப்பா இருக்கவேண்டும்' என்ற வீடுகளில் துவங்கும் பாலின பாகுபாடு பேச்சுக்களே, பிள்ளைகள் வளர்ப்பில் பெற்றோர் செய்யும் முதல் தவறு.
இதுபோன்ற பேச்சுக்கள் ஆழ்மனதில் பதிந்து, பிற்காலத்தில் ஆதிக்கம் செலுத்தும்' என உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதுகுறித்து, குழந்தை வளர்ப்பு கவுன்சிலர் மற்றும் உளவியல் நிபுணர் அனிஷா ரபி நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது..
*பெண் குழந்தைகளை அழகு சார்ந்தும், ஆண் குழந்தைகளை கம்பீரம் சார்ந்தும் பாராட்டும் வழக்கம் நம்மிடம் உள்ளது. பரிசு வாங்கும் போது ஆண் பிள்ளைக்கு கார், ஆட்டோ, டாக்டர் செட் போன்றும் பெண் பிள்ளைக்கு பாபி டால், கரடி பொம்மை, கிச்சன் செட், மேக்கப் செட் என பாலின வேறுபாடு அங்கேயே துவக்கிவிடுகின்றனர். பாலினம் சார்ந்த வேறுபாடு இன்றி பிள்ளைகளை வளர்க்கவேண்டும்.
*குழந்தைகள் வளர்வது நாம் சொல்வதை கேட்டு அல்ல பார்ப்பதையும், கேட்பதையும் தான் எடுத்துக்கொள்கின்றனர். பொதுவாக வீடுகளில் அப்பா, அம்மா விளையாட்டு, டீச்சர் விளையாட்டு போன்றவை அனைத்து குழந்தைகளும் விளையாட இதுவே முக்கிய காரணம். அப்படி பார்த்து, கேட்டு வளரும் குழந்தைகள் நல்லவற்றை பார்க்கவும், கெட்டதை கேட்காமல் இருப்பதும் பெற்றோர் பொறுப்பு .
*அப்பா எப்படி அம்மாவை நடத்துகிறார், அம்மா எப்படி அப்பாவை நடத்துகிறார் என்பதே பிள்ளைகளின் முதல் பாடம். எனவே, வீட்டில் பெற்றோர் முன்மாதிரியாக நடந்து, வேலைகளை பகிர்ந்துகொள்ளவேண்டும். நிதி சார்ந்து இருவரும் ஆலோசித்து முடிவுகளை எடுக்கவேண்டும். சண்டைகளை தனியாக, அமைதியாக குழந்தைகளுக்கு தெரியாமல் போட்டுக்கொள்ளலாம்.
*'பெண் பிள்ளைகள் தவறு செய்யும் போது வேறு வீட்டுக்கு போனால் கஷ்டபடணும் ஒழுங்கா இங்கேயே கத்துக்கோ' , 'பொண்ணுன்னா பொறுப்பா இருக்கணும்; அடங்கி போகணும், அனுசரித்து போகணும்' என்பதையும், ' ஆம்பள பையன் அப்படித்தான் இருப்பான்', 'ஆம்பள பையன் அழக்கூடாது' போன்ற பேச்சுக்கள் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும். நல்ல பண்பு, பழக்க வழக்கங்கள், அடிப்படை வீட்டு பணிகள், எதிர் பாலினத்தவரை மதிப்பது ஆகியவற்றை இருவருக்கும் சமமாக கற்றுத்தர வேண்டும்.
* குழந்தைகளிடம் கோபம், அழுகை, சோகம் போன்ற உணர்வுகளை எவ்வித மறைவும் இன்றி வெளிப்படுத்தும் இடமாக வீடு இருக்கவேண்டும். அதற்கான சூழலை பெற்றோர் ஏற்படுத்தவேண்டும்.
* சோசியல் மீடியாக்களின் தாக்கம், பல்வேறு உளவியல் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, தற்கொலை செய்து கொண்ட பெண்ணை அனைவரும் துாக்கிவைத்து பிரபலப்படுத்துவதும், வன்முறை, பாலியல் வழக்கில் கைது செய்த ஒருவன் சிரித்துக்கொண்டு கையை அசைத்து கெத்தாக செல்வதையும் குழந்தைகள் தவறான புரிதலில் எடுத்துக்கொள்கின்றனர். நாம் யாரை முன்னுதாரணமாக எடுக்கவேண்டும் என்ற புரிதலை பெற்றோர், ஆசிரியர்கள் கட்டாயம் ஏற்படுத்த வேண்டும்.
* பள்ளிகளில் உளவியல் ரீதியான பாடங்கள் இணைக்கப்பட்டு, ஆரம்பம் முதலே தெளிவான மனநிலை, பிரச்னைகளை எதிர்கொள்ளும் பக்குவம், பாலின சமத்துவம், அடிப்படை பாலியல் கல்வி சார்ந்த புரிதல் போன்றவற்றை ஏற்படுத்தவேண்டியது காலத்தின் கட்டாயம்.
*அடிப்பதும், வெட்டுவதும், சண்டைபோடுவதும் வீரம் அல்ல, முட்டாள்தனம் என்றும், பக்கத்துவீட்டுக்காரர், உறவினர் என அடுத்தவர்களின் கருத்துக்கள் நம் வாழ்விற்கு பலனளிக்காது என்றும் குழந்தைகளுக்கு ஆரம்பம் முதலே சொல்லிக்கொடுக்க வேண்டும். பல வன்முறை, தற்கொலைகளுக்கு அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதே விதையாக உள்ளது.
* அவமானங்களையும், தோல்விகளையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் இருவரிடமும் வேண்டும். ஆண்கள், பெண்கள் இருவரையும் விளையாட்டுக்களில் ஈடுபட செய்வதும், புத்தகங்கள் வாசிக்க பழக்கப்படுத்துவதும் முக்கியம்.