/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுவர் இலக்கியம் படிக்க குழந்தைகளுக்கு சொல்லிக்குடுங்க!
/
சிறுவர் இலக்கியம் படிக்க குழந்தைகளுக்கு சொல்லிக்குடுங்க!
சிறுவர் இலக்கியம் படிக்க குழந்தைகளுக்கு சொல்லிக்குடுங்க!
சிறுவர் இலக்கியம் படிக்க குழந்தைகளுக்கு சொல்லிக்குடுங்க!
ADDED : நவ 23, 2025 06:26 AM

வா சகர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்து, வாசித்தவர்கள் வாசித்த புத்தகங்களில் இருந்து, தங்களின் வாசிப்பு அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வாரம் எழுத்தாளர் கிங் விஸ்வா எழுதிய, 'தமிழ் சிறுவர் இலக்கியம் அறிந்து கொள்ள வேண்டிய ஆளுமைகள்' என்ற நுால் குறித்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை முன்னாள் இயக்குனர் விஜயராகவன், தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
நான் கடந்த, 40 ஆண்டுகளுக்கும் மேலாக புத்தகங்களை, ஆர்வத்துடன் வாசித்து வருகிறேன். எனது வாசிப்பு அனுபவத்தில், கிங் விஸ்வா எழுதியுள்ள, இந்த புத்தகம் முக்கியமானது என கருதுகிறேன்.
எனது பள்ளிப்பருவத்தில் காமிக்ஸ் புத்தகங்களை தேடிப்பிடித்து படித்து ரசித்து இருக்கிறேன். புத்தகத்தில் உள்ள கதையையும், படங்களையும் ஒன்றிணைத்து படிக்கும் போது, ஒரு திரைப்படம் போல் என் மனத்திரையில் நகரும். எனக்கு மட்டுமல்ல, என்னை போல் படக்கதைகள் படித்த பலருக்கும் இந்த அனுபவம் இருக்கும்.
எனது ஞாபக அடுக்குகளில் படித்து இருந்த கதைகளையும், கதை மாந்தர்களையும் இந்த நுால் என் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறது.
தமிழ் சிறுவர் இலக்கியம் மற்றும் காமிக்ஸ் உலகின் தலைசிறந்த ஆளுமைகளாக இருந்த ஓவியர்கள், கதாசிரியர்கள், பதிப்பாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் அனைவரையும் நேர்காணல் செய்து, இந்த நுாலின் ஆசிரியர் நேர்த்தியாக ஆவணப் படுத்தி இருக்கிறார்.
இந்தப் புத்தகத்தில், 11 மிகச்சிறந்த தமிழ் இலக்கியம் அறிந்து கொள்ள வேண்டிய ஆளுமைகளைப் பற்றி முழுமையான தகவல்களை, சுவாரசியமாகவும், எளிமையான நடையிலும் எழுதியிருக்கிறார்.
தமிழ் சிறுவர் இலக்கியத்தில் போற்றத்தக்கவர் முல்லை தங்கராசன். சித்திரக்கதை வடிவத்துக்கு முன்னோடியாக இருந்தவர். தமிழில் பல காமிக்ஸ் இதழ்களை நடத்தியவர்.
1979 ம் ஆண்டு ரத்னபாலா என்ற சிறுவர் இதழை வெளியிட்டு சிறுவர்களின் பிஞ்சு மனதில் நீங்காத இடம் பிடித்தவர். இவர் குறித்து பல தகவல்கள் இந்த நுாலில் உள்ளன.
தமிழின் முதல் போட்டோ -காமிக்ஸ் தொடரை வரைந்த ஓவியர் செல்லம் பற்றியும், ஹாரி பாட்டரைப் போன்று, பல மடங்கு ஈர்க்க வைக்கும் கதைகள் சொன்ன, அணில் அண்ணாவை பற்றியும், பெரியசாமி துாரன், வாண்டுமாமா அம்புலிமாமா சங்கர், தமிழர்களின் ரசனைக்கு பச்சைக் கொடி காட்டிய ஓவிய கோபுலு, சிறுவர்களுக்கு பிடித்த குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா, சாம்பிள் காமிக்ஸிலிருந்து சாதனை படைத்த சவுந்தர பாண்டியன் உள்ளிட்ட 11 படைப்பாளர்கள் பற்றிய முழு விவரங்களும், இந்த நுாலில் இடம் பெற்றுள்ளன.
சிறுவர்கள் கதைகளை படிக்கும் குழந்தைகளிடம் அறியும் ஆர்வமும், கற்பனை திறனும் அதிகரிக்கும். இதனால் படைப்பு ஆர்வம் வளர்ந்து எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள் என, கலைஞர்களாக மாறுவர்.
அதனால் சிந்தனையை துாண்டும், சிறுவர் இலக்கியங்களை படிக்கும் ஆர்வத்தை குழந்தைகளிடம் பெற்றோர் ஏற்படுத்த வேண்டும்.
அதற்கு, முதலில் பெரியவர்கள் இந்த நுாலை படிக்க வேண்டும். தமிழில் சிறுவர் இலக்கியம் படைத்தவர்கள் குறித்த, நல்ல தகவல் பெட்டகமாக இந்த நுால் உள்ளது.
சிந்தனையை துாண்டும் சிறுவர் இலக்கியங்களை படிக்கும் ஆர்வத்தை குழந்தைகளிடம் பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டும். அதற்கு முதலில் பெரியவர்கள் இந்த நுாலை படிக்க வேண்டும். தமிழில் சிறுவர் இலக்கியம் படைத்தவர்கள் குறித்த, நல்ல தகவல் பெட்டகமாக இந்த நுால் உள்ளது.

