ADDED : ஆக 20, 2026 06:41 PM
அன்னுார்: கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். கல்விக்கு முழு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். ‘டெட்’ தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 40 சதவீதம் என நிர்ணயிக்க வேண்டும். அரசாணை எண் 243ஐ ரத்து செய்து, ஒன்றிய முன்னுரிமையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உட்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ‘டிட்டோ ஜாக்’ சார்பில், அன்னுார் வட்டார கல்வி அலுவலர் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் ஆனந்தகுமார் தலைமை வகித்தார். வட்டார பொருளாளர் ரபியா பேகம், மாவட்ட செயலாளர் வீராசாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட முன்னாள் செயலாளர் சம்பத்குமார், மாநில துணைத்தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
