திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு... குழு அமைப்பு! பணிகளை கண்காணிக்க நகராட்சி தீவிரம்
திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு... குழு அமைப்பு! பணிகளை கண்காணிக்க நகராட்சி தீவிரம்
UPDATED : ஜூலை 01, 2026 05:16 PM
ADDED : ஜூலை 01, 2026 05:12 PM
பொள்ளாச்சி: திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்துவதில், மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு இருக்கும் வகையில், நகர்புற உள்ளாட்சி மற்றும் வார்டு அளவிலான குழு அமைத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளும், தங்களது அதிகார வரம்புக்குள் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகளான விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கழிவுகளை ஆரம்ப நிலையிலேயே பிரிப்பதை ஊக்குவித்தல், சுகாதாரத்தை கண்காணித்தல், குறைகளை தீர்த்தல் உள்ளிட்ட பணிகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் தீவிர ஈடுபாட்டை உறுதி செய்ய வேண்டும்.
குழு அமைப்பது குறித்து நகராட்சி நிர்வாக இயக்குனர், நகராட்சி, மாநகராட்சி கமிஷனர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பொள்ளாச்சி நகராட்சியில் குழு அமைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு அளவிலான திடக்கழிவு மேலாண்மை குழுவில், தலைவராக நகராட்சி தலைவரும், துணை தலைவராக கமிஷனர், உறுப்பினர்களாக நகர சுகாதார அதிகாரி, சுகாதார ஆய்வாளர் மற்றும் சுகாதார பணி மேற்பார்வைாளர்கள், அரசு சாரா நிறுவன பிரதிநிதிகள், குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள், நகராட்சி ஒருங்கிணைப்பாளர்கள், கள மேற்பார்வையாளர்கள், திடக்கழிவு மேலாண்மை ஒருங்கிணைப்பாளர்கள் இடம் பெறுகின்றனர்.
வார்டு அளவிலான திடக்கழிவு மேலாண்மை குழுவில், தலைவராக வார்டு கவுன்சிலர், துணை தலைவராக சுகாதார அலுவலர் அல்லது சுகாதார ஆய்வாளர்; உறுப்பினராக சுகாதார ஆய்வாளர் அல்லது துாய்மை பணி மேற்பார்வையாளர், அரசு சாரா நிறுவன பிரதிநிதி, நகராட்சி ஒருங்கிணைப்பாளர், திடக்கழிவு மேலாண்மை ஒருங்கிணைப்பாளர், குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள், பிற தன்னார்வ அமைப்புகள் இடம் பெற உள்ளனர்.
மண்டல தொகுதி அளவிலான திடக்கழிவு மேலாண்மை குழுவில், தலைவராக நகராட்சி தலைவர், துணை தலைவராக கமிஷனர், உறுப்பினர்கள் இடம்பெறுவர்.
குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் வாயிலாக, வீடு, வணிக மற்றும் நிறுவன அளவில் கழிவுகளை அவற்றின் உற்பத்தி இடத்திலேயே தரம் பிரிப்பதை ஊக்குவிக்க வேண்டும்.
ஈரக்கழிவு, உலர் கழிவு, சுகாதார கழிவு, சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் கழிவு என நான்கு வகைகளாக கழிவுகளை பிரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வார்டு அளவில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், துாய்மை பணிகள் நடத்துதல், கழிவு மேலாண்மை நடவடிக்கைகளை செயல்படுத்த, சுகாதார பணியாளர்களுடன் ஒருங்கிணைந்து அதிகாரிகள் செயல்பட வேண்டும்.
வீடுதோறும் கழிவு சேகரிப்பு, தரம் பிரித்தல் நடைமுறைகளை கண்காணிக்க வேண்டும். கழிவுகளை ஆங்காங்கே வீசுதல், திறந்த வெளியில் கொட்டுதல், எரித்தல் ஆகியவற்றை தடுக்க வேண்டும்.
வீட்டிலேயே மக்கும் கழிவுகளை உரமாக்குதல், பரவலாக்கப்பட்ட கழிவு செயலாக்க நடைமுறையை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இவ்வாறு, கூறினர்.
