/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே ஸ்டேஷனில் 'நீலகிரி அழகு'
/
ரயில்வே ஸ்டேஷனில் 'நீலகிரி அழகு'
ADDED : நவ 11, 2025 12:15 AM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் ரயி ல்வே ஸ்டேஷனில், நீலகிரி மாவட்டத்தின் இயற்கையை கண்முன்னே கொண்டு வரும் வகையில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள், பார்வையாளர்களை பரவசப்படுத்துகின்றன.
மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில், கடந்த 10 ஆண்டுகளாக அதிகளவில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 24 பெட்டிகள் கொண்ட ரயில் நிற்கும் வகையில், பிளாட்பாரம் விரிவுபடுத்தப்பட்டது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னைக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ், ஊட்டிக்கு மலை ரயிலும் தினமும் இயக்கப்படுகிறது.
வாராந்திர ரயிலாக, திருநெல்வேலி, துாத்துக்கடிக்கு இயக்கப்படுகிறது. தினமும் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு, ஐந்து முறை மெமு பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது.
புதிதாக நான்கு ரயில் பாதைகள் அமைக்கும் பணிகளும், மூன்று பிளாட்பாரங்களும் கட்டப்பட உள்ளன.
இதற்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. மேட்டுப்பாளையம் ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ரயில்வே ஸ்டேஷனில், மத்திய அரசின் அம்ருத் திட்டத்தில், 10 கோடி செலவில், பாரம்பரியம் மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. வாகனங்கள் நிறுத்தும் இடம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. பூங்கா அமைக்கும் பணிகள் நடக்கின்றன. மலை ரயில் பாதையில் தென்படும் இயற்கை காட்சிகளை, ஸ்டேஷன் சுவற்றில் வரையப்பட்டுள்ளன. பெண்கள் தேயிலை பறிப்பது, மலையில் உள்ள பாலத்தின் மீது ரயில் பயணிப்பது, வனவிலங்குகள் நடமாட்டம் ஆகியவை வரையப்பட்டு உள்ளன. இதை பார்க்கும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது.
ரயில்வே ஸ்டேஷனில், 19 கோடி மதிப்பில், 24 ரயில் பெட்டிகள் நிறுத்த, இரண்டு புதிய பிளாட்பாரங்கள், மலை ரயில் நிறுத்த, ஒரு புதிய பிளாட்பாரம், ரயில் பாதைகளும் அமைக்கப்பட உள்ளன. பாதைகள் அமைத்த பின், கோவையில் இருந்து புறப்படும், சில ரயில்கள், மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு, ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

