ADDED : செப் 25, 2026 08:00 PM
கோவை: வேளாண்மை பல்கலைக்கழகம், வேளாண் பூச்சியியல் துறையில் மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் மையம் உள்ளது. இதை மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா ஆய்வு செய்தார்.
‘கருப்பு ஈ மூலம் மக்கும் கழிவுகளில் நுண் உரம் தயாரிக்கிறோம். கருப்பு ஈ மனிதர்கள், விலங்குகள், தாவரங்களுக்கு தீங்கு விளைவிக்காது. கழிவுகளை வேகமாக சிதைப்பதால் துர்நாற்றம் வீசாது. வளர்ந்த கருப்பு ஈ புழுக்களில் புரதச்சத்து நிறைந்துள்ளது.
செல்லப்பிராணிகள், பறவைகள், மீன்களுக்கு தீவனமாகும். இதிலிருந்து பெறப்படும் எண்ணெய் தொழில்துறைக்கு உதவும். தாவரங்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உரம் கிடைக்கிறது’ என, பூச்சியியல் துறையினர் தெரிவித்தனர்.
அவர்கள் மேலும், ‘மாநகரில் அதிக கழிவு சேகரிப்படுவதால் இத்திட்டத்தை செயல்படுத்துவது எளிது. மாநகராட்சியின் 5 மண்டலத்திலும் சுமார் 3 டன் மக்கும் குப்பை உருவாகிறது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிதி உதவியுடன் ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் நிறுவப்பட்டுள்ளது. இதனால் கழிவுகளை இன்னும் வேகமாக உரம் தயாரிக்க முடியும்’ என்றனர்.
ஆய்வின்போது பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தர் ரவீந்திரன், மாநகராட்சி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருந்தனர்.
