/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பந்து வீச்சாளர்கள் 'சுழல்' ஜாலம்; சொர்க்கபுரியான ஆடுகளம்! நிதானமாக விளையாடி வெற்றிக்கு வித்திட்ட 'பேட்டர்'கள்
/
பந்து வீச்சாளர்கள் 'சுழல்' ஜாலம்; சொர்க்கபுரியான ஆடுகளம்! நிதானமாக விளையாடி வெற்றிக்கு வித்திட்ட 'பேட்டர்'கள்
பந்து வீச்சாளர்கள் 'சுழல்' ஜாலம்; சொர்க்கபுரியான ஆடுகளம்! நிதானமாக விளையாடி வெற்றிக்கு வித்திட்ட 'பேட்டர்'கள்
பந்து வீச்சாளர்கள் 'சுழல்' ஜாலம்; சொர்க்கபுரியான ஆடுகளம்! நிதானமாக விளையாடி வெற்றிக்கு வித்திட்ட 'பேட்டர்'கள்
ADDED : நவ 25, 2024 10:47 PM
'தினமலர் பிரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டியில் நேற்று சுழல் பந்து வீச்சாளர்களின் ஜாலத்தால் விக்கெட் மளமளவென விழுந்த அதேசமயம் பேட்ஸ்மேன்களால் ஆடுகளம் சொர்க்கபுரியானது.
கோவை விழாவின், 17வது பதிப்பை முன்னிட்டு 'தினமலர்' நாளிதழ் மற்றும் 'லைகா கோவை கிங்ஸ்' சார்பில் 'தினமலர் பிரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டி கடந்த, 22ம் தேதி துவங்கியது. 32 கல்லுாரி அணிகள் இதில் பங்கேற்றுள்ளன.
சி.ஐ.டி., கல்லுாரியில் நேற்று ஈஷா கல்லுாரியும், ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜி., கல்லுாரியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த கிருஷ்ணா கல்லுாரி அணியினர் (12 ஓவர்கள்), 5 விக்கெட் இழப்புக்கு, 108 ரன்கள் எடுத்தனர். ஈஷா அணியினர், 9 விக்கெட்டுக்கு, 71 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
இரு ஓவரில், 3 விக்கெட் வீழ்த்திய கிருஷ்ணா அணி வீரர் மணி பாரதிக்கு, சி.ஐ. டி., கல்லுாரி முதல்வர் ராஜேஸ்வரி ஆட்ட நாயகன் விருது வழங்கினார். மதியம், நேரு இன்ஜி., மற்றும் எஸ்.டி.சி., பொள்ளாச்சி அணிகள் மோதின.
டாஸ் வென்ற நேரு கல்லுாரி 'பவுலிங்' தேர்வு செய்தது. எஸ்.டி.சி., அணி, 20 ஓவர்களில், 6 விக்கெட்டுக்கு, 164 ரன்கள் எடுத்தது. நேரு அணியினர், 11.5 ஓவர்களில், 61 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தனர். 44 பந்துகளில், 75 ரன்கள் எடுத்த எஸ்.டி.சி., வீரர் சந்தோஷிற்கு, கே.எம்.சி.எச்., முதன்மை செயல் அதிகாரி சிவகுமரன் ஆட்ட நாயகன் விருது வழங்கினார்.
எஸ்.என்.எம்.வி., கல்லுாரியில், என்.ஜி.எம்., மற்றும் ஸ்ரீ சக்தி இன்ஜி., கல்லுாரி அணிகள் விளையாடின. பேட்டிங் செய்த சக்தி அணியினர், 20 ஓவர்களில், 6 விக்கெட்டுக்கு, 121 ரன்கள் எடுத்தனர்.
என்.ஜி.எம்., அணியினர், 17 ஓவர்களில், 4 விக்கெட்டுக்கு, 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். 53 பந்துகளில், 50 ரன்கள் எடுத்த வீரர் தனுஷிற்கு எஸ்.என்.எம்.வி., உடற்கல்வி இயக்குனர் சதீஷ் ஆட்ட நாயகன் விருது வழங்கினார்.
இந்துஸ்தான் இன்ஜி., மற்றும் ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜி., கல்லுாரியும் மோதின. பேட்டிங் செய்த ஈஸ்வர் அணியினர், 20 ஓவர்களில், 8 விக்கெட் இழப்புக்கு, 144 ரன்கள் எடுத்தனர். இந்துஸ்தான் அணியினர், 20 ஓவர்களில், 6 விக்கெட் இழப்புக்கு, 136 ரன்கள் எடுத்தனர். 71 பந்துகளில், 93 ரன்கள் குவித்ததுடன், 3 விக்கெட் வீழ்த்திய, ஈஸ்வர் அணி வீரர் யஸ்வந்திற்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
ரன் குவிப்பு!
சங்கரா கல்லுாரி மைதானத்தில், இந்துஸ்தான் கலை கல்லுாரியும், என்.ஜி.பி., கலை கல்லுாரியும் மோதின. இந்துஸ்தான் அணியினர், 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட் களையும் இழந்து, 60 ரன்கள் எடுத்தனர். என்.ஜி.பி., அணியினர், 9.4 ஓவர்களில் இரு விக்கெட் இழப்புக்கு, 61 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.
இரு விக்கெட் வீழ்த்திய என்.ஜி.பி., அணி வீரர் சச்சினிற்கு, சங்கரா கல்லுாரி துணை இணை செயலாளர் நித்தியா ஆட்ட நாயகன் விருது வழங்கினார். பி.எஸ்.ஜி., கலை கல்லுாரியும், குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரியும் மோதின.
பேட்டிங் செய்த பி.எஸ்.ஜி., அணியினர், 20 ஓவர்களில் இரு விக்கெட் இழப்புக்கு, 233 ரன்கள் எடுத்தனர். அதிகபட்சமாக, வீரர் ஹர்ஜித் சரவணகுமார், 68 பந்துகளில், 110 ரன்கள் எடுத்தார். குமரகுரு அணியினர், 20 ஓவர்களில், 8 விக்கெட் இழப்புக்கு, 161 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
ஹர்ஜித் சரவணகுமாருக்கு 'லைகா கோவை கிங்ஸ்' உதவி பயிற்சியாளர் சுரேஷ் ஆட்ட நாயகன் விருது வழங்கினார். ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரியில், கே.பி.ஆர்., கல்லுாரியும், என்.ஜி.பி., தொழில்நுட்ப கல்லுாரியும் மோதின.
கே.பி.ஆர்., அணியினர், 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 118 ரன்கள் எடுத்தனர். என்.ஜி.பி., அணியினர், 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 100 ரன்கள் எடுத்தனர். கே.பி.ஆர்., அணி வீரர் பரத் ரித்விக், 4 ஓவர்களில், 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.
இவருக்கு, ராமகிருஷ்ணா கல்லுாரி முதல்வர் சவுந்தரராஜன் ஆட்ட நாயகன் விருது வழங்கினார். சி.எம்.எஸ்., அறிவியல் கல்லுாரியும், ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரியும் விளையாடின. டாஸ் வென்ற சி.எம்.எஸ்., அணியினர் 'பவுலிங்' தேர்வு செய்தனர்.
பேட்டிங் செய்த ராமகிருஷ்ணா அணியினர், 20 ஓவர்களில், 8 விக்கெட் இழப்புக்கு, 96 ரன்கள் எடுத்தனர். சி.எம்.எஸ்., அணியினர், 14.3 ஓவர்களில், 3 விக்கெட்டுக்கு, 100 ரன்கள் எடுத்தனர். 38 பந்துகளில், 44 ரன்கள் எடுத்த வீரர் சந்துருவுக்கு, ராமகிருஷ்ணா கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் நித்தியானந்தன் ஆட்ட நாயகன் விருது வழங்கினார்.
கரம் கோர்த்தவை!
'தினமலர்' நாளிதழுடன் எஸ்.எஸ்.வி.எம்., நிறுவனங்கள், இந்துஸ்தான் நிறுவனங்கள், 'வால்ரஸ்' நிறுவனம், சுப்ரீம் மொபைல்ஸ் ஆகியன இணைந்து வழங்குகின்றன. வரும், 29ம் தேதி வரை போட்டிகள் நடக்கின்றன.
பரிசுகள் இதோ!
முதல் பரிசாக, ரூ.50 ஆயிரம், இரண்டாவதாக ரூ.25 ஆயிரம், மூன்றாவதாக ரூ.15 ஆயிரம், நான்காவதாக ரூ.10 ஆயிரம் மற்றும் டிராபி வழங்கப்படுகிறது. மூன்று சிறந்த பவுலர்கள் 'லைகா கோவை கிங்ஸ்' அணி மூலம் 'நெட் பவுலர்'கள் ஆக தேர்வு செய்யப்பட்டு ஊக்குவிக்கப்பட உள்ளனர்.